வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு குப்பைகளை 30 நாளில் உரமாக்க 20 லட்சத்திற்கு பாக்டீரியா கொள்முதல்

வேலூர், ஜன.22: வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு குப்பைகளை 30 நாளில் உரமாக்க ₹20 லட்சத்திற்கு பாக்டீரியா கொள்முதல் செய்து 4மண்டலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 45க்கும் மேற்பட்ட திடக்கழிவு மேலாண்மை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் சாலையோரங்களில் இருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் மூலமாக தினமும் வீடுகளுக்கு சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து துப்புரவு பணியாளர்கள் பெற்று வருகின்றனர்.இவர்கள் குப்பைகளை சேகரித்துக்கொண்ட திடக்கழிவு மேலாண்மை கட்டிடத்தில் கட்டப்பட்டுள்ள, குப்பைகளை உரமாக மாற்றும் இடத்தில் குப்பைகளை கொட்டி வைக்கின்றனர். இதில் குப்பைகள் உரமாக மாற, மாட்டின் சாணம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இவை உரமாக மாற்றுவதற்கு 60 நாட்களுக்கு மேல் ஆகிறது.இதனால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் குப்பைகளை உரமாக மாற்ற தாமதம் ஏற்பட்டது. இதனால் இக்கட்டிடங்களுக்கு அருகாமையில் குப்பைகளை கொட்டி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, குப்பைகளை எளிதில் உரமாக மாற்ற கேரளாவில் இருந்து கடந்த மாதம் சோதனை அடிப்படையில் பாக்டீரியா வாங்கப்பட்டது.

சோதனை முறையில் காட்பாடி காந்திநகரில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கட்டிடத்தில் உள்ள குப்பைகளில் பாக்டீரியாக கலந்து சோதனை செய்யப்பட்டது. இத்திட்டம் வெற்றிபெற்றதையடுத்து கேரளாவில் இருந்து ₹20 லட்சம் மதிப்பில் பாக்டீரியா கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை உரமாக மாற்ற பசுமாட்டு சாணம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போது குப்பைகள் உரமாக மாற 60 நாட்கள் வரை ஆனாது. தற்போது கேரளாவில் இருந்து ₹20லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட பாக்டீரியா மூலம் 30 நாட்களில் குப்பை உரமாக மாற்றப்படுகிறது. இந்த பாக்டீரியாவை தண்ணீரில் கலந்து குப்பைகள் மீது தெளித்துவிட்டால், பாக்டீரியாக்களுக்கு உயிர் வந்துவிடும். பின்னர் 30 நாளில் குப்பைகள் உரமாக மாறிவிடும். இதனை பயன்படுத்துவதால், குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வருவதும் குறைந்துவிடும்’ என்றனர்.

Related Stories: