வேலூர் மாவட்டத்தில் கூட்டுப்பண்ணையத்திட்டத்தில் 1000 சிறு, குறு விவசாயிகளை கொண்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைப்பு

வேலூர், ஜன.22: வேலூர் மாவட்டத்தில் கூட்டுப்பண்ணையத்திட்டத்தில் 1000 சிறு, குறு விவசாயிகளை கொண்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டும் என்று ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசினார். வேலூர் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் கூட்டுப்பண்ணையத்திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் பண்ணை இயந்திர விற்பனையாளர் ஒங்கிணைப்பு கூட்டம் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீரிஷ்சந்திரசிங், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர் பயிற்சி நிலையத்தின் வேளாண்மை துணை இயக்குனர் பாலா வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குனர் சங்கர் திட்ட விளக்க உரையாற்றினார்.

முன்னதாக கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது: இந்த திட்டத்தில் முதற்கட்டமாக ஒரு கிராமத்தில் தொடர்ச்சியாக நிலம் கொண்ட ஒரே பயிரினை சாகுபடி செய்யும் 20 சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைந்து ஒரு விவசாய ஆர்வலர் குழு அமைக்கப்பட வேண்டும். இவர்களில் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு உறுப்பினரின் பங்குதொகையாக ஆயிரம் ரூபாய்யும், உறுப்பினர் சந்தாவாக நூறு ரூபாய்யும், செலுத்தப்பட்டு குழுவிற்கான வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கப்பட வேண்டும். 2ம் கட்டமாக வட்டார அளவில் ஒரே பயிர் வகைகளைச் சாகுபடி செய்யும், கிராமங்களிலோ அல்லது அண்மைக் கிராமங்களிலோ உள்ள 5 ஆர்வலர் குழுக்களை இணைத்து 100 ஊழியர் உற்பத்தியாளர் குழுக்களை ஏற்படுத்திட வேண்டும்.

அடுத்தநிலையாக ஒவ்வொரு 10 உழவர் உற்பத்தி குழுக்களை ஒங்கிணைத்து ஆயிரம் சிறு, குறு விவசாயிகளை கொண்ட உழவர் உற்பத்தி நிறுவனத்தை ஏற்படுத்தி, உற்பத்தியாளராக விளங்கும் விவசாயிகளையே தொழில் முனைவோராக முன்னேற வாய்ப்பளிக்கப்படுகிறது. அனைத்து உழவர் ஆர்வலர் குழுவும் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுவும், ஒவ்வொரு மாதமும் கூடி தங்கள் வயல்வெளி அனுபவங்களையும் புதிய தொழில்நுட்பங்களையும் பகிர்ந்து கொண்டு அடுத்து மேற்கொள்ள வேண்டிய கூட்டுப்பண்ணைய திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். 2019-2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு தொகுப்பு நிதி ₹5 லட்சம் தமிழக அரசு வழங்கியது. அந்த நிதியை கொண்டு உறுப்பினர்கள் விவசாயத்திற்கு தேவையான பண்ணை கருவிகளை வாங்கி பயன்படுத்த வழிவகை உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: