சிவன்மலையில் தைப்பூச தேர்த்திருவிழா ஆலோசனைக் கூட்டம்..

காங்கயம், ஜன. 22:  சிவன்மலை சுப்ரமணியசாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழாவையொட்டி ஆலோசனைக் கூட்டம் நேற்று கோயில் மண்டப அரங்கில் நடந்தது. சிவன்மலை சுப்ரமணியசாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழா ஜன.30 முதல் பிப். 17ம் தேதி வரை நடக்க உள்ளது. தேர்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்.8,9,10 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நேற்று மலைமீதுள்ள மண்டப கூட்ட அரங்கில் நடந்தது. தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கினார். காங்கயம் தாசில்தார் புனிதவதி, கோயில் செயல் அலுவலரும் உதவி ஆணையருமான கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேரோட்டம் நடைபெறும் நாட்களில் கிரிவலப்பாதை மற்றும் பக்தர்கள் கூடும் இடங்களில் சுகாதாராம் பேன கூடுதல் பணியாட்களை நியமிப்பது, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிரிவலப்பாதை மற்றும் சுற்றுப்பகுதியில் 100 சி.சி.டி.வி கேமராக்களை  பொருத்துவது, 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

மின் வயர்களை பி.வி.சி பைப்புகள் மூலம் கொண்டு செல்வது, பக்தர்களின் மருத்துவ வசதிக்காக மூன்று மருத்துவ வாகனங்களை தயார் நிலையில் வைப்பது. மேலும் மலையடிவாரத்தில் நெரிசலைக் குறைக்க தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பக்தர்கள் கோயிலுக்கு சிரமமின்றி வந்து செல்ல கூடுதல் பஸ்களை போக்குவரத்து துறை மூலம் இயக்குவது உள்ளிட்ட முடிவுகளும் எடுக்கப்பட்டன. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால், பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ரசாயனம் கலந்த வண்ண போடிகளை பயன்படுத்தி உணவுகளை தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதில், காங்கயம் பீ.டி.ஓ.ரமேஷ், சிவன்மலை பஞ்சாயத்து தலைவர் துரைசாமி, சுகாதாராதுறை, தீயணைப்புத்துறை, போக்குவரத்துதுறை, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: