×

கோவையில் ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்த மதிமுக வலியுறுத்தல்

கோவை, ஜன. 22: கோவையில் ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது. கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில், கோவை ரயில் நிலையம் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் தரக்கூடிய ஏ1 அந்தஸ்துடன்கூடிய ரயில் நிலையமாக உள்ளது. ஆனால், அதிகரித்து வரும் ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, கோவையில் ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்படாமல் நீண்டகாலமாக இழுபறியில் உள்ளது.
எனவே, கட்டமைப்பு வசதிகளை கோவை ரயில் பயணிகளுக்கு செய்துகொடுக்க வேண்டுகிறோம்.

கோவை-பெங்களூர் இடையே தினசரி இரவு நேர ரயில் இருமார்க்கத்திலும் இயக்க வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழியாக திருவனந்தபுரத்துக்கு தினசரி இருமார்க்கத்திலும் இரவுநேர ரயில் இயக்க வேண்டும். கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக கன்னியாகுமரி வரை தினசரி இரவுநேர ரயில் இரு மார்க்கத்திலும் இயக்க வேண்டும். கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரத்துக்கு தினசரி இரவுநேர ரயில் இருமார்க்கத்திலும் இயக்க வேண்டும். கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு பகல்நேர இன்டர்சிட்டி ரயில் இருமார்க்கத்திலும் இயக்க வேண்டும். தொழிலாளர்கள் நலனை கருத்தில்கொண்டு, கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கும், திருப்பூருக்கும் பாசஞ்சர் ரயில் அதிகளவில் இயக்கவேண்டும். வடகோவை, பீளமேடு, இருகூர் ஆகிய ரயில்நிலையங்களை மேம்படுத்தி, கோவைக்கு வந்துசெல்லும் அனைத்து ரயில்களும் நின்று, செல்ல ஆவண செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Tags : Mudmukha ,Coimbatore ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...