நீலாம்பூர் பகுதியில் போதை வாலிபர்கள் ரகளை

சூலூர், ஜன. 22: சூலூர் அருகே உள்ள நீலாம்பூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 4 வாலிபர்கள் போதையில் நடமாடினர். அவர்கள் அங்கு பேருந்துக்கு நின்றிருந்தவர்கள் மீது விழுந்தும், இருசக்கர வாகனங்களில் செல்வோரை தடுத்து நிறுத்தியும் ரகளையில் ஈடுபட்டனர். அந்த வாலிபர்கள் தகாத வார்த்தைகள் பேசினர். அவர்களில் ஒருவர் சாக்கடை கால்வாய்க்குள் இறங்கி நின்றுகொண்டு சாக்கடையை பொதுமக்கள் மீது வீசியுள்ளார். மேலும் இருவர் கோவை அவினாசி சாலையில் படுத்து உருண்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நீண்ட நேரம் ஆகியும் வராததால், பொதுமக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் போதை வாலிபர்களை பிடித்து அருகிலிருந்த கம்பத்தில் கட்டி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  போதை வலிபர்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நீலாம்பூர் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் கோவையின் பல பகுதிகளில் இருந்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் இங்கு வந்து போதைப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ஒரு சிலர் போதையில் இங்கேயே ரகளையில் ஈடுபடுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து சட்ட விரோத கும்பல்களை கைது செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories: