மத்திய அரசு ஒதுக்கிய தொகையில் திருநர்களுக்கு ஒரு பைசாகூட கிடைக்கவில்லை

கோவை,ஜன.22: மத்திய அரசு கடந்தாண்டு பட்ஜெட்டில் மாற்றுப்பாலினத்தோருக்கு ஒதுக்கிய தொகையில் திருநர்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை என மாற்றுப்பாலினத்தோர் நல செயல்பாட்டாளர்கள் தெரிவித்தனர். கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் மாற்று பாலினத்தோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பத்திரிகையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் நிறங்கள் அமைப்பின் நிறுவனர் சிவா, நிர்வாக குழு உறுப்பினர் செல்வம், டெல்பினா ஆகியோர் கலந்து கொண்டனர். பாலினம் என்றால் என்ன? ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள், பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?, ஓரின சேர்க்கையாளர்களின் மனநிலை, திருநம்பிகளின் தேவைகள் அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிறங்கள் அமைப்பின் நிறுவனர் சிவா கூறியதாவது:-  மாற்று பாலின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், மன வேதனைகளை ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்து கொண்டோம்.  இந்த நிகழ்வானது ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும். பால், பாலினம், பால் ஈர்ப்பு போன்றவை குறித்து மக்களிடையே புரிதல் இல்லை. திருநர்கள் குறித்து இழிவாக எண்ணும் மனநிலையில்தான் பெரும்பான்மையோர் உள்ளனர்.

உலக அளவில் தமிழகத்தில்தான் முதன்முறையாக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திருநங்கைகளுக்கான நலவாரியம் துவங்கப்பட்டது. மத்திய அரசு திருநங்கைகளுக்கு வழங்கும் சலுகைகளை திருநம்பிகளுக்கு வழங்குவதில்லை. திருநம்பிகளுக்கும் உரிய சலுகைகள் வழங்கிட வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் திருநம்பிகள் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள இதுவரை அடையாள அட்டைகள் வழங்கப்படாமல் உள்ளது. அடையாள அட்டைகளை உடனடியாக வழங்கவேண்டும். திருநர்களுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஹார்மோன் சிகிச்சை பெற்று அதற்கான சான்றிதழ் பெற வேண்டும் என பல்வேறு  கட்டுப்பாடுகள் உள்ளன. இதற்கு அதிகளவில் பணம் செலவாகும். மத்திய அரசு கடந்த 2019 பட்ஜெட்டில் மாற்றுப்பாலினத்தவருக்கு ஒதுக்கிய தொகையில் ஒரு பைசா கூட திருநர்களுக்கு கிடைக்கவில்லை. திருநர் என்ற பெயரில் நல வாரியம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: