தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல்

ஈரோடு, ஜன.22: ஈரோடு  மாவட்டத்தில் தென்னை மரங்களில் ரூக்கோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்  குறித்து வேளாண்மைத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக  விஞ்ஞானிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்தில் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென்னை மரங்களை தாக்கி வந்த வெள்ளை ஈக்கள் தற்போது, ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், சத்தியமங்கலம், நம்பியூர், அரச்சலூர், கோபி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தென்னை மரங்களை தாக்கி வருகிறது. ரூக்கோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் கூட்டமாக இருந்து சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதுடன் ஈக்களினால் வெளியேற்றப்படும் தேன் போன்ற திரவம் கரும்பூஞ்சாணமாக ஓலைகளில் கருப்பு நிறமாக மாறிவிடுகின்றன.இதனால், தென்னைகளில் மகசூல் பாதியாக குறைந்துவிடுவதாகவும், குறிப்பாக தேங்காய் போதிய வளர்ச்சி இன்றி சிறிய அளவில் உள்ளதாகவும் விவசாயிகள் புகார் கூறி வந்தனர். இதையடுத்து, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் பிரபாகர் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பிரேமலதா, துணை இயக்குநர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து வேளாண் விஞ்ஞானிகள் கூறியதாவது: தென்னையை தாக்கி வரும் வெள்ளை ஈக்கள் 2004ம் ஆண்டில் மத்திய அமெரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்டது. 2016ம் ஆண்டில் தமிழகத்தில் பொள்ளாச்சி, கேரளாவில் பாலக்காடு மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இதன் தாக்குதல் தென்பட தொடங்கியது. இந்த ஈக்கள் தென்னை மரம் மட்டுமல்லாமல் 140 வகையான இதர தாவரங்களையும் தாக்குகிறது. தென்னை மரங்கள் பொதுவாக உயரமாக இருப்பதால் பயிர் பாதுகாப்பு மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும் என விவசாயிகளிடம் வலியுறுத்தி வருகிறோம். இதை கட்டுப்படுத்த பாலித்தீன் காகிதத்தில் விளக்கெண்ணை அல்லது கிரீஸ் இரு புறமும் தடவி ஒரு ஏக்கருக்கு குறைந்தது 8 மரங்களுக்கு இடையில் கட்டி விடவேண்டும். மேலும், ஒட்டுண்ணியை தென்னை ஓலைகளில் கட்டிவிடுவதன் மூலமும் கட்டுப்படுத்தலாம். வெள்ளை ஈக்கள் தாக்கத்தால் தென்னை உற்பத்தியில் இதுவரை பாதிப்பு ஏதும் இல்லை என்பது கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: