கோட்டை ஈஸ்வரன் கோயில்களில் பக்தர்களுக்கு கடந்தாண்டு 45,000 துணிப்பை வழங்கல்

ஈரோடு, ஜன.22: ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் வகையறா கோயில்களில் கடந்தாண்டு பக்தர்களுக்கு 45 ஆயிரம் துணிப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களுக்கு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, அறநிலையத்துறை சார்பில் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் கவர்களில் பூஜை பொருட்கள் கொண்டு வந்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களில் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வருவோருரிடம் அதை பெற்றுக் கொண்டு இலசவமாக துணிப்பைகள் வழங்கப்பட்டது.

இந்த கோயில்களில் மட்டும் கடந்தாண்டு 45 ஆயிரம் துணிப்பைகள் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கோயில் அலுவலர்கள் கூறுகையில்,`பிளாஸ்டிக் தடைக்கு பிறகு, கோயில்களுக்குள் பிளாஸ்டிக் கவருடன் பக்தர்கள் வந்தால் அதனை பறிமுதல் செய்து, அவர்களுக்கு இலவசமாக துணிப்பைகள் வழங்கி வருகிறோம். கடந்த ஆண்டில் 45 ஆயிரம் துணிப்பை வழங்கி உள்ளோம். நடப்பாண்டு முதல் பக்தர்கள் கோயிலுக்குள் பூஜை பொருட்களான தேங்காய், பூ, பழம் எடுத்து செல்ல மூங்கில் தட்டுக்கூடை வழங்க முடிவு செய்துள்ளோம்’ என்றனர்.

Related Stories: