பொங்கல் பண்டிகை முடிந்ததால் ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்

ஈரோடு, ஜன.22: பொங்கல் பண்டிகை முடிந்ததால் ஈரோட்டில் நேற்று நடந்த ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது. இதனால், 10 சதவீதம் மட்டுமே வியாபாரம் நடந்தது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கனி மார்க்கெட் வாரச்சந்தை, காந்திஜி ரோடு மார்க்கெட், அசோகபுரம் மார்க்கெட் ஆகிய மார்க்கெட்டுகளில் திங்கள் இரவு துவங்கி செவ்வாய் இரவு வரை ஜவுளிசந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில வாரமாக சந்தையில் விற்பனை களைகட்டியது. பல்வேறு ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்வதற்காக மொத்த வியாபாரிகள் மட்டுமின்றி ஈரோடு மாவட்டத்தில் இருந்தும் பொதுமக்கள் ஜவுளி வாங்க வந்தால் விற்பனை அமோகமாக இருந்தது. தற்போது, பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில் நேற்று ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கனி மார்க்கெட் வாரச்சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது. பொதுமக்களின் வருகை குறைவாக இருந்ததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று நடந்த சந்தையில் 10 சதவீதம் அளவிற்கே வியாபாரம் நடந்தது. இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையையொட்டி ஜவுளிகளை கொள்முதல் செய்ய அதிகமாக பொதுமக்களும் வியாபாரிகளும் வந்ததால் விற்பனை அமோகமாக இருந்து. தற்போது, பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் நேற்று நடந்த சந்தைக்கு மக்கள் குறைவாகவே வந்தனர்.  இதனால், விற்பனையும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. வழக்கமான விற்பனை அடுத்த வாரத்தில் இருந்து துவங்கும் என எதிர்ப்பார்க்கிறோம்’ என்றனர்.

Related Stories: