பெண்கள், சிறுமிகளை துன்புறுத்தியதாக மாவட்டத்தில் 209 வழக்குகள் பதிவு

ஈரோடு, ஜன.22: ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் மைனர் சிறுமிகளை துன்புறுத்தியது தொடர்பாக 209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி சக்தி கணேசன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க ‘லேடீஸ் பர்ஸ்ட் திட்டம்’ கடந்த ஆண்டு மே மாதம் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்காக, 96552 20100 என்ற செல்போன் எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், கடந்தாண்டில் 1,500 அழைப்புகள் வந்தது. அதில், அனைத்து அழைப்புகளுக்கும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 1,450 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள வழக்குகள் விசாரணையில் உள்ளன. அதேபோல், கடந்தாண்டு மாவட்டத்தில் பெண்களை துன்புறுத்தியது தொடர்பாக 139 வழக்குகளும், மைனர் பெண் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 70 போக்சோ வழக்குகள் என 209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதில், 25 வழக்குகளுக்கு நீதிமன்றம் மூலம் கடந்தாண்டே குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டது. அதேபோல் வரதட்சணை கொடுமை செய்ததாக 3 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் ஈரோடு மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகம் நடப்பதாக கருதக்கூடாது. பெண்களை பாதுகாப்பினை உறுதி செய்யவும், தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தரப்படுகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ‘லேடீஸ் பர்ஸ்ட்’ திட்டத்திலும் தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்பினை இத்திட்டத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: