பஸ் ஸ்டாண்ட் சுங்க கட்டண ஏலம் 13வது முறையாக ஒத்திவைப்பு

ஈரோடு, ஜன.22: ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள், வாகன நிறுத்தங்கள் என மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதற்காக, 3 ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பஸ்களுக்கு சுங்க கட்டணம் 3 ஆண்டுக்கு ஒருமுறை விடப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 3 ஆண்டுக்கான ஒப்பந்தம் கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் முடிந்த நிலையில் ஏப்ரல் மாதம் ஏலம் விட மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்ட நிலையில் யாரும் ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை. மத்திய அரசு கொண்டு ஜிஎஸ்டி இந்த ஏலத்தொகைக்கு நிர்ணயித்துள்ளதால் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.

ஏலத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளதால் பஸ்களுக்கான சுங்க கட்டணம் உயர்த்தி தர வேண்டும் என ஏலதாரர்களின் கோரிக்கையும் நிறைவேற்றி தர வில்லை. இதனால், தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட் சுங்க கட்டண வசூல் தொடர்பாக ஏலம் விட்டு வருகிறது.  13வது முறையாக சுங்க கட்டணம் வசூல் செய்வது தொடர்பான ஏலம் 21ம்தேதி (நேற்று) காலை 11 மணிக்கு நடத்தப்படும் என்றும், இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் அளி்க்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தரவின்பேரில் உதவி ஆணையர் (வருவாய்) குமரேசன், உதவி வருவாய் அலுவலர் வசந்தி ஆகியோர் தலைமையில் ஏலம் நடத்த காத்திருந்தனர். ஆனால், வழக்கம்போல் ஏலத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை.ஏலதாரர்கள் கூறுகையில்,`மாநகராட்சி பஸ் ஸ்டாண்டில் தினமும் தனியார், அரசு பஸ்கள், மினிபஸ்கள் என 600க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கிறது. இந்த பஸ்களுக்கான சுங்க கட்டணத்தை வசூல் செய்வது தொடர்பாக துப்புரவு பணியாளர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவு உள்பட 45 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தொகையாக நிர்ணயித்துள்ளனர்.  இதற்கான ஜிஎஸ்டி தொகையும் சேர்த்து நிர்ணயித்துள்ளதால் இதை எவ்வாறு வசூலிப்பது என தெரியவில்லை. பஸ்சுக்கான சுங்க கட்டணம் பல ஆண்டுகளாக 15 ரூபாயாக உள்ளது. இதை உயர்த்தாமல் உள்ளனர்.

ஏலத்தொகையை குறைக்க வேண்டும் என்றும், ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அதிக தொகைக்கு ஏலம் எடுத்தால் இழப்பு தான் ஏற்படும். ஆகையால், நாங்கள் ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை’ என்றனர். மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,`கடந்த முறை நடந்த ஏலத்தொகையில் இருந்து உயர்த்திதான் ஏலம் விட வேண்டும். அதற்கேற்ப தான் ஏலத்தில் ஆரம்ப தொகையை நிர்ணயித்துள்ளோம். ஆனால், ஜிஎஸ்டி பிரச்சனை உள்ளதால் ஏலம் எடுக்க முன்வராமல் உள்ளனர். இதனால், இந்த முறையும் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்களை கொண்டே பஸ் ஸ்டாண்டில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். அரசு எடுக்கும் முடிவின்படி மீண்டும் ஏலம் விட நடவடிக்கை  எடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: