×

ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் புதர் மண்டி காட்சியளிக்கும் உணவகம்

திருப்போரூர், ஜன.22:  திருப்போரூர் அடுத்த ஆலத்தூரில் சிட்கோ  தொழிற்பேட்டை உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்துகள்  தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 10 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த சிட்கோ  தொழிற்பேட்டை நுழைவாயிலில் தொழிலாளர்களின் வசதிக்காக உணவகம்  கட்டப்பட்டது. இந்த உணவகம் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு, முறையாக நடத்தப்பட்டது. இதன் மூலம் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் உணவுக்கு வெளியே  செல்லாமல் வளாகத்துக்கு உள்ளேயே உணவு அருந்தும் வசதி பெற்றனர். மேலும்,  தொழிற்சாலைகளுக்கே சென்று உணவு சப்ளை செய்யும் வசதியும் நடந்தது. ஆனால், உணவக உரிமையாளர் இறந்ததால் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.  இதையடுத்து சிட்கோ நிர்வாகம் உணவகத்தை நடத்துவதற்கும், குத்தகைக்கு  விடுவதற்கும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் நாளடைவில் இந்த உணவக  கட்டிடம் இருந்த இடம் தற்போது சீமைக்கருவேல மரங்கள் நிறைந்த காடாக மாறி  விட்டது.

சமூக விரோதிகள் இந்த கட்டிடத்திற்குள் நுழைந்து மது  அருந்துவது உள்பட பல்வேறு சமூக விரேத செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், இந்த கட்டிடத்தை சுற்றிலும் புதர் மண்டிக்  கிடப்பதால் தனியாக செல்லும் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை  உள்ளது. தொழிற்பேட்டை வளாகத்தில் உணவகம் இல்லாததால் திருப்போரூரில் உள்ள  தனியார் ஓட்டல்களுக்கு சென்று அதிக செலவு செய்து உணவு அருந்த வேண்டிய நிலை  தொழிற்சாலை ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, ஆலத்தூர் சிட்கோ  தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள உணவக வளாகத்தை சுற்றிலும் உள்ள முட்புதர்களை  அகற்றி முன்பு போல் உணவகம் செயல்பட சிட்கோ நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Busty Mandy Showcase Restaurant ,
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...