பொங்கல் திருநாளையொட்டி விளையாட்டுத் திருவிழா

காஞ்சிபுரம், ஜன.22: காஞ்சிபுரம் அடுத்த ஏகனாம்பேட்டையில் பொங்கல் திருநாளையொட்டி இளைஞர் முன்னேற்ற சங்கம் சார்பில் ராணியம்மன் கோயில் வளாகத்தில் விளையாட்டு திருவிழா நடத்தப்பட்டது. இளைஞர் முன்னேற்ற சங்க தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஏகனாம்பேட்டை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மோகனவேலு முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தை நலக்குழும உறுப்பினர் சக்திவேல் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.தமிழரின் தொன்மை, பழங்கால பழக்க வழக்கங்கள், தமிழ் மாண்பு போன்றவற்றை பாதுகாத்து மெருகேற்றும் வகையில் இந்த விளையாட்டுத் திருவிழா நடந்தது. தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குளக்கரையைச் சுற்றி குழந்தைகளின் கரங்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவர்களின் வயதுவாரியாக இசை நாற்காலி, ஓவியம் வரைதல், பாட்டு, கட்டுரை, ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கரும்பு தின்னும் போட்டி பிரத்யேகமாக நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இளைஞர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் வினோத்குமார், நாகராஜன், கணபதி, நடராஜன், உத்திரமூர்த்தி, ஊராட்சி செயலாளர் ஜீவானந்தம் உள்பட 300க்கும் மேற்பட்ட குழந்தைகளும் கலந்துகொண்டனர்.

Tags : sports festival ,
× RELATED பள்ளி விளையாட்டு விழா