தொடூர் - கண்ணந்தாங்கல் சாலையில் சேதமடைந்துள்ள மேல்மதுரமங்கலம் தரைப்பாலம்

ஸ்ரீபெரும்புதூர், ஜன.22: ஸ்ரீபெரும்புதூர் அருகே மேல்மதுரமங்கலத்தில் உள்ள தரைப்பாலம் கடந்த மழையின்போது சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். விரைவில் பாலத்தை  சீரமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மேல்மதுரமங்கலம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கூத்தவாக்கம், தண்டலம், கள்ளிப்பட்டு கிராம மக்கள் காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஊழியர்கள் தொடூர் - கண்ணந்தாங்கல் சாலையை பயன்படுத்துகின்றனர். தொடூர் - கண்ணந்தாங்கல் சாலை மேல்மதுரமங்கலம் பகுதியில் தரைபாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையில், பாலத்தின் இருபுறமும் மழைநீரில் அடித்து செல்லபட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாலத்தை கடந்து செல்லும் போது அச்சத்துடன் செல்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மேல்மதுரமங்கலம் கிராமத்தில் உள்ள மக்கள் மதுரமங்கலம் பகுதியில் உள்ள பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், வங்கி உள்பட பல அரசு அலுவலகங்களுக்கு செல்ல தொடூர் - கண்ணந்தாங்கல் சாலையை பயன்படுத்துகிறோம். இந்த சாலையின் இடையே உள்ள மேல்மதுரமங்கலம் தரைபாலம் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையில், வெள்ளம் ஏற்பட்டு, மழைநீரில் அடித்து செல்லப்பட்டது. தற்போது சாலையின் ஒருபுறம் பாலம் உடைந்துள்ளது. இதனால் இந்த பாலத்தை கடந்து செல்ல பெரும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைக்க வேண்டும் என்றனர்.

Tags : bridge ,road ,Thodur - Kannandangal ,
× RELATED அரிமளம் பகுதி சாலையில் விபத்தை தடுக்க புதிய பாலம் கட்ட வேண்டும்