×

நாயக்கன்பேட்டை ஈஸ்வரன் கோயில் அருகே சாலையில் கொட்டப்படும் ஓட்டல் உணவு கழிவுகள்

வாலாஜாபாத், ஜன. 22: வாலாஜாபாத் அருகே நாயக்கன்பேட்டை ஈஸ்வரன் கோயில் அருகே ஓட்டல் உணவு கழிவுகள் கொட்டுவதால், அதை சாப்பிட வரும் கால்நடைகளுக்குள் மோதல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகள் படுகாயமடைகின்றனர். வாலாஜாபாத் - காஞ்சிபுரம் செல்லும் சாலையை ஒட்டி அய்யம்பேட்டை, ராஜம்பேட்டை, நாயக்கன் பேட்டை, ஏகனாம்பேட்டை, தாங்கி, வெண்குடி, கீழ்ஒட்டிவாக்கம் உபட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதுமட்டுமின்றி வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் தினமும் செங்கல்பட்டு, தாம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான கார், பைக், லாரிகள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையை ஒட்டியுள்ள நாயக்கன்பேட்டை ஈஸ்வரன் கோயிலின் சிறிது தூரத்தில், சாலையை ஒட்டி குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதில் கோழி கழிவுகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து வெளியேற்றப்படும் உணவு கழிவுகள் அனைத்தும் இங்கு கொட்டப்படுகின்றன.

இதனால், இங்கு மேய்ச்சலுக்காக வரும் கால்நடைகள் மற்றும் நாய்கள், சாப்பிடும்போது மோதல் ஏற்பட்டு, சாலையில் மிரண்டு ஓடுகின்றன. இதனால், அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் விபத்தை சந்திக்கின்றனா். குறிப்பாக, பைக்கில் செல்வோர், நிலைதடுமாறி விழுந்து படுகாயமடைவது, தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தால், நெடுஞ்சாலை துறையிடம் செல்லும்படி கூறுகின்றனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் முறையிட்டால், ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கும்படி கூறி அலைக்கழிக்கின்றனர். இதனால், பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஊராட்சி அல்லது நெடுஞ்சாலை துறை  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, சாலையில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். உணவு கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : road ,Nayakanpet ,Eswaran ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...