கேளம்பாக்கம் அடுத்த தையூரில் பூட்டியே கிடக்கும் கட்டுமான தொழிலாளர் ஓய்வுக்கூடம்

திருப்போரூர், ஜன. 22: கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில், திறப்பு விழா முடிந்த பின்னரும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்டுமான தொழிலாளர் ஓய்வுக்கூடம் பூட்டியே கிடக்கிறது. இதனால், மக்களின் வரிப்பணம் 16 கோடி வீணாகிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். பழைய மாமல்லபுரம் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமான பணிகளில் உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் இருந்து, சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலான கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் ஒரு தகர கொட்டகை அமைத்து பணியாளர்களும், அவர்களது குடும்பங்களும் தங்க வைக்கப்படுகின்றனர். இதனால், பல இடங்களில் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதில் பெண்கள், குழந்தைகள் மழைக்காலங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், இரவு நேரங்களில் தூங்க சரியான இடம் இல்லாததால், வேலை செய்யும் போது பாதிப்பு ஏற்பட்டு விபத்துக்களை சந்தித்தனர். இதையடுத்து வெளிமாநில கட்டுமான தொழிலாளர்கள் தங்குவதற்காக கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில் தமிழ்நாடு கட்டுமான நல வாரியம் சார்பில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஓய்வுக்கூடம் 16 கோடியே 84 லட்சம் செலவில் கட்டப்பட்டது.

இந்த ஓய்வுக்கூடத்தில் 1000 படுக்கைகள் கொண்ட தொழிலாளர்கள் தூங்கும் அறைகள், ஏடிஎம், அம்மா உணவகம், குளியல் மற்றும் கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சலவையகம், மருத்துவ ஆலோசனை மையம். மருத்துவ சிகிச்சை மையம் ஆகியவை உள்ளன. கடந்த 2015ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டு 2016ம் ஆண்டு பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து, 2 ஆண்டுகள் பூட்டி வைக்கப்பட்டிந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இக்கட்டிடத்தை திறந்து வைத்தார். ஆனால், ஒன்றரை ஆண்டுகள் முடிந்தும் இதுவரை பயனாளிகளுக்கு இந்த கட்டிடம் வழங்கவில்லை.

இதனால், மக்களிடம் பெற்ற வரியான பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இக்கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இரவு நேரங்களில் மர்மநபர்கள் உள்ளே நுழைந்து மது அருந்துதல், சூதாட்டம் உள்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பல கோடிகளை செலவழித்து கட்டப்பட்ட இக்கட்டிடத்தை திறந்தால் ஓரளவுக்காவது வடமாநில தொழிலாளர்கள் பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் என கட்டுமான தொழிலாளர் சங்கம் தெரிவித்து உள்ளது. தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டப்பட்ட இக்கட்டிடத்தை மாவட்ட நிர்வாகம் திறந்து தொழிலாளர்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : construction workers ,restroom ,Kelambakkam ,
× RELATED நேர்முக தேர்வு வரை சென்று வந்தவர்கள்...