பொங்கல் விழாவில் இருதரப்பு மோதல் பள்ளி, கல்லூரிக்கு மாணவர்களை அனுப்பாமல் பெற்றோர் போர்க்கொடி

கெங்கவல்லி, ஜன.22: சேலம் அருகே பொங்கல் விழாவில் இருதரப்பு மோதல் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு மாணவர்களை அனுப்பாமல் போர்க்கொடி தூக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த வீரகனூர் அருகேயுள்ள வேப்பம்பூண்டி கிராமத்தில், கடந்த 17ம் தேதி காணும் பொங்கலன்று மாரியம்மன் ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் முடிந்த பின்னர் ஒரு தரப்பினர் வீட்டுக்குச் சென்றனர். அப்போது, அவர்களை மற்றொரு தரப்பைச் சேர்ந்த 30 பேர் வீடு புகுந்து சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, 18ம் தேதி இந்திய ஜனநாயக கட்சி மாநில இணைச்செயலாளர் வரதன், கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் வீரகனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதன்பேரில், வீரகனூர் போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Advertising
Advertising

இந்நிலையில், செந்தில் என்பவரை மற்றொரு தரப்பைச் சேர்ந்த புரூஸ்லி(எ) சக்திவேல்(35) நேற்று முன்தினம் தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், அவரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்2 மாணவர் ஒருவர் ஆறகளுர்-வேப்பம்பூண்டி சாலையில் வந்தபோது, டூவீலரில் வந்த மற்றொரு தரப்பச் சேர்ந்த 4 பேர் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பைச் சேர்ந்தவர்கள், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று தங்களது குழந்தைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

Related Stories: