காய்கறிகள் விளைச்சல் அதிகரிப்பால் உழவர் சந்தைகளில் வரத்து அதிகரிப்பு

சேலம், ஜன.22: விளைச்சல் அதிகரிப்பால் உழவர் சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்தது. இதனால் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விவசாயிகள் வழக்கத்தை விட காய்கறிகளை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்  பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறார்கள். இது கடந்த ஆண்டை விட அதிகம். வடகிழக்கு பருவமழை மற்றும் விளைச்சல் காரணமாக சேலம் உழவர் சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி வழக்கமாக காய்கறிகள் விலை உயர்ந்து காணப்படும். தற்போது பண்டிகை முடிந்தையொட்டி காய்கறிகள் விலை குறைந்துள்ளது. மேலும் உழவர் சந்தைக்கு தக்காளி, பெரிய வெங்காயம், வெண்டைக்காய், புடலங்காய், பீர்க்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. தற்போது காய்கறிகள் விலை குறைந்துள்ளதால் வீட்டில் உள்ள பெண்கள் ஆர்வத்தோடு அதிகளவில் காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர். மேலும் கேரட், கிழங்கு வகைகள் ஊட்டி, கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

காய்கறிகள் வரத்து குறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், சேலம் உழவர் சந்தைக்கு சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். தற்போது பருவமழை முடிந்து விளைச்சல் அதிகரித்துள்ளதால் காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரத்தில் தக்காளி ₹16, மிளகாய் ₹26, வெண்டைக்காய் ₹18, கத்திரிக்காய் ₹36, முருங்கைகாய் ₹120, பீர்க்கங்காய் ₹20, புடலங்காய் ₹18, பாகற்காய் ₹30, தேங்காய் ₹35, முள்ளங்கி ₹16, பீன்ஸ் ₹58, கேரட் ₹60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

தற்போது, பொங்கல் பண்டிகை முடிந்ததும், விவசாயிகள் விளைச்சல் செய்த காய்கறிகளை அறுவடை செய்வார்கள். இந்நிலையில் விளைச்சல் அதிகரித்துள்ளதால் காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் விலை குறைந்துள்ளது. நேற்று தக்காளி ₹12, மிளகாய் ₹22, வெண்டைக்காய் ₹10, கத்திரிக்காய் ₹30,  முருங்கைகாய் ₹100, பீர்க்கங்காய் ₹15, புடலங்காய் ₹10, பாகற்காய் ₹22,  தேங்காய் ₹30, முள்ளங்கி ₹10, பீன்ஸ் ₹44, கேரட் ₹56 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஹோட்டல் நடத்துபவர்கள், குடும்ப இல்லத்தரிசிகள் என ஏரளாமானவர்கள் காய்கறிகள் வாங்குவதற்கு வருகின்றனர். மேலும் காய்கறிகள் வரத்து 20 சதவீதம் அதிகரித்துள்ளது. என்றனர்.

Related Stories: