கிருஷ்ணகிரியில் நாளை 333 ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர்களுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரி, ஜன.22: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை(23ம்தேதி) ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதியதாக பதவியேற்றுள்ள கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு மாவட்ட அளவிலான பல்துறை அலுவலர்கள் மூலம் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி நாளை(23ம் தேதி) நடைபெற உள்ளது. அதன்படி, ஓசூரில் உள்ள மீரா மஹாலில் நடக்கும் பயிற்சியில் ஓசூர், தளி, கெலமங்கலம் மற்றும் சூளகிரி பகுதியைச் சேர்ந்த 146 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கும், கிருஷ்ணகிரியில் உள்ள மீனாட்சி மஹாலில் நடக்கும் பயிற்சியில், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி மற்றும் காவேரிப்பட்டணம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 186  தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதேபோல், போச்சம்பள்ளியில் உள்ள அம்மன் மஹாலில் நடக்கும் பயிற்சியில் பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 188 ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், அரசியலமைப்பு ஆணைகள், அவர்களுக்கான பொறுப்புகள், உள்ளாட்சிக்கான நிர்வாக அதிகாரம், அரசால் செயல்படுத்தப்படும் முதன்மைத் திட்டங்கள், குடிமை செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரே நாளில் 3 இடங்களில் 333 ஊராட்சிகளைச் சேர்ந்த 666 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : panchayat chief ,deputy leaders ,Krishnagiri ,
× RELATED கைதிகளை கட்டுப்படுத்த சிறப்பு பயிற்சி