கெங்கவல்லி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி

கெங்கவல்லி, ஜன.22: கெங்கவல்லி அருகே தனியார் பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இளம் பெண் உயிரிந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர். இவரது மகள் அஜ்மத்(35). இவர் கணவரை பிரிந்து, தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 12வயதில் மகள் உள்ளது. இந்நிலையில் அஜ்மத் மகளிர் சுய குழுவுக்கு, தம்மம்பட்டி வங்கியில் பணம் கட்டுவதற்காக நேற்று காலை, 74 கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து பஸ்சில் சென்று விட்டு, மீண்டும் செந்த ஊருக்கு, தம்மம்பட்டியில் இருந்து ஆத்தூர் செல்லும் தனியார் பஸ்சில் ஏறி வந்தார். பஸ்சை கொண்டயம்பள்ளி பகுதியை சேர்ந்த முருகேசன்(40). என்பர் ஓட்டி வந்தார்.

இந்நிலையில் பஸ் 74 கிருஷ்ணாபுரம் அருகே வந்த போது, பஸ்சில் இருந்து  இறங்குவதற்காக, அஜ்மத் படிக்கட்டுக்கு வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக படிக்கட்டில் இருந்து, அஜ்மத் தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த, கெங்கவல்லி போலீசார் அஜ்மத் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தனியார் பஸ் டிரைவர் முருகேசனை போலீசார் கைது செய்து, பஸ்சை பறிமுதல் செய்தனர்.

Tags : Teenager ,Kengavalli ,
× RELATED அக்கா திட்டியதால் வாலிபர் தற்கொலை