திருமக்கோட்டை அருகே பைக் மீது கார் மோதல்: விவசாயி பலி

மன்னார்குடி, ஜன. 22: திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட ராதா நரசிம்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமையன் (65) விவசாயி . இவர் கடந்த 10ம்தேதி மாலை தனது உறவினர் ஒருவருடன் பைக்கில் மன்னார்குடி சென்று விட்டு இரவு ஊருக்கு திரும்பும் வழியில் பைங்காநாடு கீழத் தோப்பு மெயின் ரோடு அருகே வந்த போது பின்னால் வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில் பைக்கின் பின்புறம் உட்கார்ந்திருந்த ராமையன் தலையில் பலத்த காயத்துடன் கீழே விழுந்தார்.அப்போது அந்த வழியாக வந்த சிலர் விபத்தில் சிக்கியவரை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராமையன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ராமையன் உயிரிழந்தார். இது குறித்து அவரது மருமகன் மனோகரன் திருமக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ முத்து காமாட்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் வெங்கத்தான்குடி கிராமத்தை சேர்ந்த முகேஷ் (27) என்பவர் ஒட்டி வந்த கார்தான் விபத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிய வந்தது. அதன் பேரில் கார் டிரைவர் முகேசை திருமக்கோட்டை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Car collision ,Tirumakottai ,
× RELATED பஸ்-கார் மோதல்; போக்குவரத்து பாதிப்பு