திருத்துறைப்பூண்டியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள திருமண மண்டபங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி, ஜன.22: திருத்துறைப்பூண்டியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள திருமண மண்டபங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்துறப்பூண்டி நகராட்சி பகுதிகளில் இயங்கும் திருமண மண்டபங்கள் நகராட்சியின் அனுமதி பெற்று அந்த அனுமதியில் தெரிவித்துள்ள வரையறைகளின்படியும் திட்ட மதிப்பீட்டின் படியும் கட்டப்பட வேண்டும். ஆனால் சில திருமண மண்டபங்கள் அரசு மற்றும் நகராட்சி வரையறையின்படி கட்டப்படவில்லை. குறிப்பாக அவசர கால வழி, கழிவு நீர் வடிகால், சுகாதாரமான குடிநீர் வசதி இல்லை மேலும் வாகனங்கள் நிறுத்துமிடம் முறையாக அமைக்கப்படவில்லை. திருமண மண்டபங்களின் வளாகத்தில் வணிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது சட்டத்திற்கு விரோதமானதாகும். இதனால் பொதுமக்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இது குறித்து நகராட்சிக்கு ஏற்கனேவே புகார் வந்து உள்ளது.எனவே இந்த முறைகேடு குறித்து நகராட்சி நிர்வாகம், தீயணைப்பு துறை உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை அனுப்பி உள்ளனர்.

இது குறித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர்மையதலைவர் வக்கீல் நாகராஜன்அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருத்துறைப்பூண்டியில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரிய கட்டடங்கள், மால்கள், தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் இயங்கி வருகின்றன. திருமண மண்டபங்கள், தியேட்டர்கள் ஆகியவை நகராட்சியின் உரிய நிலவரைபட அனுமதி பெற்றே கட்டப்படுதல் வேண்டும். ஆனால் திருமண மண்டபங்களும் குளிரூட்டப்பட்ட திரை அரங்குகள் பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் கட்டப்பட்டுள்ளன. இதனால் தீ விபத்து மற்றும் இயற்கை சீரழிவு ஏற்படும்பொழுது தப்பி செல்வதற்கு நுகர்வோர்களுக்கு உரிய வெளியேறும் வழி இல்லை. குறிப்பாக பொதுமக்கள் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி தியேட்டர்கள் வெளியே உரிய விஸ்தாரமான இடங்களும் இல்லாமல் வெறும் குறுகிய இடத்தில் வியாபார நோக்குடன் இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதனை கண்டறிந்து மாதாந்திர சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டிய திருத்துறைப்பூண்டி நகராட்சி தனது கடமைகளை சரிவர செய்வதில்லை. நகராட்சி அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின்வசதி, குடிநீர் வசதி. கழிவு நீர் போக்கு வசதி ஆகியவை வழங்கக்கூடாது என்ற கட்டாய விதியும் மீறப்பட்டு அனைத்து வசதிகளும் கேட்காமலே கொடுக்கப்படுகிறது. இதனால் திருமண மண்டபங்கள், தியேட்டர்களுக்குச் செல்லும் பொது மக்களுக்கு பெருத்த அபாயம் ஏற்படும் நிலைஉள்ளது. நகராட்சி அனுமதி பெற்று உள்ள படி கட்டாத திருமண மண்டபத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக மாவட்ட நுகர்வோர் மையக்கு புகார் வரப்பெற்று உரிய நடவடிக்கைக்காக உரிய அலுவலர்களுக்கு அனுப்பப்படும் நடவடிக்கை இல்லை. ஆதலால் திருவாரூர் கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனுமதி பெற்றபடிகட்டாத திருமண மண்டபம், தியேட்டருக்கு நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags : wedding halls ,
× RELATED சாயப்பட்டறைகளுக்கு இடம் கொடுப்போர்...