இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்

திருவாரூர், ஜன. 22: இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென்மண்டல துணைத் தலைவர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் திருவாரூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, 1956ம் ஆண்டுக்கு முன்பு இன்சூரன்ஸ் துறையில் ஈடுபட்டிருந்த 200க்கும் மேற்பட்ட தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மக்களின் பணத்தை சூறையாடியது. இதனைத் தொடர்ந்து 1956ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, நிதியமைச்சர் தேஷ்முக் ஆகியோரால் இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப்பட்டது. அப்போது இன்சூரன்ஸ் துறையின் கடமைகளாக இன்சூரன்ஸ் பரவலாக்கப்பட வேண்டும், மக்களின் சேமிப்பிற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும், மக்களின் சேமிப்பு மக்களுக்காக பயன்படுத்த வேண்டும் என 3 கடமைகள் அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டு பின்னர் இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப் பட்டது.

இன்சூரன்ஸ் துறையானது தனக்கு அளிக்கப்பட்ட மூன்று கடமைகளையும் சரியாக நிறைவேற்றி வருகிறது. தற்போது இன்சூரன்ஸ் பரவலாக்கல் மூலம் நாட்டில் மிகப் பெரும்பான்மையான மக்கள் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவ்வாறு ஏறத்தாழ 40 கோடி பேர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மக்களின் சேமிப்பு என்பதும் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. மேலும் மக்களின் சேமிப்பு மக்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற கடமையில் கோடிக்கணக்கான ரூபாய் இந்திய நாட்டின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக சாலை மேம்பாடு,குடிநீர்,போக்குவரத்து போன்ற பல்வேறு பணிகளுக்கு எல்ஐசியின் சேமிப்பு பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் தற்போதைய அரசு இன்சூரன்ஸ் பிரிமியம் மீது ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதுடன் பிரீமியத்திற்க்கான தாமத கட்டணத்தின் மீதும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மக்களின் சேமிப்பை பாதிக்கக்கூடிய மிகப் பெரிய அம்சம்.
எனவே மத்திய அரசு இன்சூரன்ஸ் பிரிமியம் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை நீக்கிட வேண்டும். மேலும் எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை பாதுகாத்திடவும், பலப்படுத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதுடன் அந்நிய முதலீட்டையும் உயர்த்தக் கூடாது இவ்வாறு சுவாமிநாதன் தெரிவித்தார்.

Tags : GST ,
× RELATED 3 மாத இடைவெளியில் வரி சீரமைப்பு...