திருவையாறில் கோயில் கட்டும் பணியை தாசில்தார் தடுத்ததால் பொதுமக்கள் மறியல்

திருவையாறு, ஜன. 22: திருவையாறில் கோயில் கட்டும் பணியை தாசில்தார் தடுத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவையாறு- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்தின் வடகரையில் 15 மண்டபத்தெரு உள்ளது. அந்த தெருவில் மலையாள மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அடுத்த மாதம் தெருவாசிகள் கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுத்து திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. அக்கோயிலின் எதிரே புறா கூண்டு அருகே விநாயகர் கோயில், முனியாண்டவர் கோயிலில் திருப்பணி நடந்து வருகிறது. முனியாண்டவர் கோயில் அடிதளம் இட்டு கோபுரம் அமைக்க புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.

கோயில் கட்டி வருவதை பார்த்த திருவையாறு தாசில்தார் இளமாருதி, முனியாண்டவர் கோவில் கட்டும் இடம் அரசுக்கு சொந்தமான இடம் என கூறி கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சங்கர் தலைமையில் நேற்று திருவையாறு- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருவையாறு டிஎஸ்பி பெரியண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியில் ஈடுபட்டவர்களிடம் பேசி தீர்த்து கொள்ளலாம் என்றார். அதைதொடர்ந்து சாலை மறியல் கைவிடப்படடது. பின்னர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது பொதுமக்கள் சார்பில் மிகவும் பழைமை வாய்ந்த கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த மனுவை தஞ்சை கலெக்டருக்கு பரிந்துரை செய்யுமாறு தாசில்தார் கூறினார். இந்த சாலை மறியலால் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: