589 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் துணை தலைவர்களுக்கு பயிற்சி வகுப்பு இன்று துவக்கம்

தஞ்சை, ஜன. 22: தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு இன்று துவங்குகிறது. தஞ்சை மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 589 ஊராட்சிகளுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்களுக்கு மாவட்ட அளவில் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், ஊராட்சிகள் உதவி இயக்குனர், மாவட்ட ஊராட்சி செயலர் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்களை கொண்டு ஒருங்கிணைப்பு மற்றும் அறிமுக கூட்டம்

நடத்தப்படவுள்ளது.

மேலும் உள்ளாட்சி நிதி பண பரிமாற்றத்தில் மின்னணு பண பரிமாற்றம் தொடர்பாக விளக்க உரை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தஞ்சை அருகே வல்லத்தில் இன்று (22ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் மற்றும் நாளை (23ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பூதலூர், திருவையாறு, கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், அம்மாபேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Related Stories: