×

நள்ளிரவில் வீடு புகுந்து மாஜி பஞ்சாயத்து தலைவரை தாக்கி கொள்ளை முகமூடி ஆசாமிகள் அட்டகாசம்

அறந்தாங்கி, ஜன. 22: அறந்தாங்கி அருகே நள்ளிரவில் மாஜி பஞ்சாயத்து தலைவர் வீடு புகுந்து முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். மனைவியின் செயினை பறித்தபோது அதை தடுத்த மாஜி பஞ்சாயத்து தலைவரை கொள்ளையர்கள் தாக்கினர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிலட்டூரை சேர்ந்தவர் சுகுமாறன்(58). சிலட்டூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மனைவி செந்தாமரை(53). தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு கணவன்-மனைவி தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம நபர்கள் 3பேர் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அறையிலிருந்த பீரோவை உடைத்து 2 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டனர். மேலும் நகை, பணம் இருக்குமா என தேடினர். எதுவும் கிடைக்கவில்லை.

பின்னர் சுகுமாறன் படுத்திருந்த அறைக்குள் புகுந்த கொள்ளையர்கள் தூங்கிக்கொண்டிருந்த செந்தாமரையின் கழுத்திலிருந்த 10 பவுன் தாலிச்செயினை பறித்தனர். இதில் கண்விழித்த செந்தாமரை செயினை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். சத்தத்தில் எழுந்த சுகுமாறன், மனைவியிடம் செயினை பறிக்க விடாமல் கொள்ளையர்களிடம் போராடியபடி கூச்சலிட்டார்.இதில் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் சுகுமாறனின் காலில் தாக்கினர். தலையில் தாக்க வந்தபோது தலையணையால் தடுத்ததால் தப்பினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால் கொள்ளையர்கள் 2 பவுன் நகையுடன் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து சுகுமாறன் அளித்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் அங்கு வந்து விசாரித்தனர். மேலும் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர். அறந்தாங்கி எல்என்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் தொடர்ந்துநடந்து வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். நேற்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கி கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இரவு ரோந்து வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : panchayat leader ,Majhi ,Assamese ,
× RELATED 102 தொகுதிகளில் முதற்கட்ட...