×

விசைப்படகு மீனவர்கள் தங்குகடல் செல்வதை முறைப்படுத்த வேண்டும்

பணகுடி, ஜன. 21: விசைப் படகு மீனவர்கள் தங்குகடலுக்கு செல்வதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சங்க தலைவர் எரிக்ஜூட் தலைமையில் உவரி ரைமண்ட், கூத்தன்குழி ராஜா மற்றும் மீனவ சங்கத்தினர், நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீசிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த அக்டோபர் 11ம் தேதி சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகத்தில் கன்னியாகுமரி விசைப்படகு மீனவர்களுக்கும், நெல்லை நாட்டுப்படகு மீனவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் தங்குகடல் செல்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது 1983ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மீன்பிடி சட்டத்தின் அடிப்படையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் அதுதொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது கன்னியாகுமரி மீனவர்களைப்போல் துத்துக்குடி விசைப்படகு மீனவர்களும் தங்குகடல் மீன்பிடிக்க செல்வதாக தகவல்கள் உள்ளது. இதுபோல முறையற்ற தங்குகடல் மீன்பிடி தொழில் நடந்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் விசைப்படகுகள் அதிக திறன் கொண்ட வலைகளை பயன்படுத்துவதால் மீன்கள் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதோடு நாட்டுப்படகு மீனவர்கள் தொழில் செய்ய நீண்ட துரம் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. எனவே கடற்கரை ஒழுங்குமுறை மீன்பிடி சட்டத்தினை முறையாக செயல்படுத்தி நாட்டுப்படகு மீனவ குடும்பங்களை காப்பாற்றிட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Tags : Fisheries fishermen ,sea ,
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!