நாளை முதல் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி காரையாறு கோயிலுக்கு அரசு பஸ்களில் செல்ல அனுமதி

வி.கே.புரம். ஜன. 21: வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியையொட்டி காரையாறு கோயிலுக்கு நாளை முதல் அரசு பஸ்களில் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பாபநாசம்,  அம்பை முண்டந்துறை, கடையம் உள்ளிட்ட வனச்சரகங்களில் ஆண்டுதோறும் புலிகள், தாவர உண்ணிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான கணக்கெடுப்பு பணி, நாளை(22ம் தேதி) முதல் 27ம் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.இதையொட்டி நாளை முதல் 27ம் தேதி வரை பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு அரசு பேருந்துகளில் சென்று வர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்களில் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை. அரசு போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டால் சிறப்பு பேருந்துகள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் கூறினர். இன்று வனவிலங்குகள் கணக்கெடுப்பவர்களுக்கான பயிற்சி முண்டந்துறையில் நடைபெறுகிறது. இதில் தன்னார்வ தொண்டர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 100 பேர்களும், வனத்துறையினர் 60 பேரும் கலந்து கொள்கின்றனர். பயிற்சி முடிந்ததும் நாளை கணக்கெடுக்கும் பணியை தொடங்குகின்றனர்.

Related Stories: