×

கேரள எல்லையில் தடுத்து நிறுத்தப்படும் லாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி வைக்கோல் தொழிலாளர்கள் மனு

தென்காசி, ஜன. 21: தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு வைக்கோல் ஏற்றிச் செல்லும் லாரிகள் தடுத்து நிறுத்தப்படுவதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்து வைக்கோல் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். தென்காசி மாவட்டம், வடகரை, பண்பொழி, அச்சன்புதூர், புளியரை செங்கோட்டை, சுரண்டை, உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பிசான சாகுபடியாக நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட பின்பு நெல்மணிகள் பிரிக்கப்பட்டு வைக்கோல்கள் சிறுசிறு கட்டுகளாகக் கட்டப்பட்டு தங்களது உபயோகத்திற்கு போக மீதமுள்ளவற்றை விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இதனை கேரள வியாபாரிகள் தங்களுடைய கால்நடைகளுக்கு தீவனமாக அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த 60 வருடங்களாக செங்கோட்டை வழியாக கேரளாவிற்கு வைக்கோல்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் தஞ்சை, மதுரை, சிவகங்கை, விழுப்புரம், தேனி, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடைக்காலம் துவங்கியுள்ளதால் அங்கிருந்தும் வைக்கோல்கள் லாரிகளில் புளியரை வழியாக கேரளாவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வாகனங்கள் அதிக எடையுடன் செல்வதாக கூறி புளியரை போலீசார் 40க்கும் மேற்பட்ட லாரிகளை சாலைகளின் ஓரங்களில் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் கேரள வியாபாரிகளும் தமிழகத்திற்கு வந்து வைக்கோல் வாங்கிச்செல்லும் போது போலீசாரால் பெரும் அபராதம் விதிக்க நேரிடும் என பயந்து வைக்கோல் வாங்க வர மறுக்கிறார்கள். இதனால் தென்காசி மாவட்ட விவசாய பகுதிகளில் இந்த வைக்கோல்கள் அப்படியே அறுவடை செய்யப்பட்ட வயல்களில் குவியல்களாக விற்பனை செய்யப்படாமல் கிடக்கிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தில் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் வைக்கோல் கட்டும் தொழிலை வாசுதேவநல்லூர், வெள்ளாளன் கோட்டை, புளியங்குடி, சேர்ந்தமரம், செங்கோட்டை, புளியரை, தெற்கு மேடு பகவதிபுரம் பகுதிகளைச் சார்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இவர்களும் வேலையின்றி பாதிக்கப்படுகின்றனர்.  இந்நிலையில் செங்கோட்டை புளியரையை சேர்ந்த வைக்கோல் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நலிவடைந்து வரும் வைக்கோல் ஏற்றும் தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நிர்வாகிகள் ஞானராஜ், நசீர், பொன்னுச்சாமி தலைமையில் மனு அளித்தனர்.

காய்ந்த நெற்கதிருடன் வந்த விவசாயி வடகரையை சேர்ந்த விவசாயி அப்துல்அலி, காய்ந்த நெற்கதிர்களுடன் வந்து மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: வடகரை கீழ்பிடாகை அடவிநயினார் அணைக்கட்டு திட்டத்தில் மேட்டுக்கால் பாசனத்தில் நஞ்சை நிலங்களில் பிசான சாகுபடியாக நெல் நடவு செய்துள்ளோம். இதில், அம்பை 16 நெல் ரகம் நடவு செய்த விவசாயிகளின் வயல்களில் நெற்கதிர்கள் வரும் சமயத்தில் அதிகப்படியான நெற்கதிர்கள் வெள்ளை நிறமாக காட்சியளிக்கிறது. அதாவது சாவியாக வந்தும், நெல்மணிகள் சரியாக வராமலும் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : border ,Kerala ,
× RELATED கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால்...