×

இளையான்குடி பகுதியில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

இளையான்குடி, ஜன.21:  இளையான்குடி பகுதியில் நிரந்தரமாக அரசு மிளகாய், பருத்தி கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என, மிளகாய், பருத்தி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளையான்குடி பகுதி முற்றிலும் விவசாயம் நிறைந்த பகுதியாகும். பெரும்பாலும் வானத்தை நம்பியே மானாவாரி பயிர் செய்யப்படுகிறது. நடப்பாண்டில் பெய்த தொடர் மழையில் நெல் விவசாயம் சுமார் 30 சதவீதம் மகசூல் பாதிப்படைந்தது. நெல்லில் ஏற்பட்ட இழப்பீட்டை நிவர்த்தி செய்ய, விவசாயிகள் மிளகாய், மற்றும் பருத்தி சாகுபடியில்     ஆர்வம் காட்டியுள்ளனர். அ.திருவுடையார்புரம், தாயமங்கலம், இளையான்குடி, சாலைக்கிராமம், சூராணம் ஆகிய வருவாய் பிர்காக்களுக்கு உட்பட்ட சுமார் 120க்கும் மேற்பட்ட கிராமங்களில், மிளகாய் 4ஆயிரத்து 66 ஹெக்டேரிலும்,  பருத்தி சுமார் 4ஆயிரம் ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த  இரண்டாண்டுகளுக்கு முன் இந்த பகுதியில், சாகுபடி செய்யப்பட்ட பருத்தியை வேளான் வணிகத் துறையினரின் சிபாரிசின் பேரில் சில பெருவியாபாரிகள் கொள்முதல் செய்து ஒரு கிலோ பருத்தி பஞ்சுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை விலையை  நிர்ணயம் செய்தனர்.  அரசு  கொள்முதல் நிலையங்கள் இருந்தால் கிலோவுக்கு ரூ.20  முதல் ரூ.40 வரை கூடுதல் லாபம் கிடைத்திருக்கும். லாபமான விலை இல்லாததால் இளையான்குடி வட்டார மிளகாய் மற்றும்  பருத்தி விவசாயிகள் ஆண்டு முழுவதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் இளையான்குடி பகுதியில் நிரந்தர அரசு பருத்தி, மற்றும் மிளகாய் கொள்முதல் நிலையங்கள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து மலைச்சாமி கூறியதாவது, விவசாயம் நிறைந்த இந்த பகுதியில் தனியார் வியாபாரிகளே விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். அதனால் விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்படுகிறது. அதனால் இளையான்குடி பகுதியில் அரசு நிரந்தர பருத்தி மற்றும் மிளகாய் கொள்முதல் நிலையங்கள் திறக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : government ,Ilayankudi ,procurement center ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...