×

வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடுக்கு சாதி சான்றிதழ் கிடைக்காமல் பழங்குடியின மக்கள் அவதி

சிவகங்கை, ஜன. 21:  சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் காட்டுநாயக்கன்(பழங்குடியினர்) சமூகத்தினருக்கு பல ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காமல் உள்ளதால் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் (பழங்குடியினர்) சமூகத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 100ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் இந்த சமூகத்தை சேர்ந்த யாருக்கும் இதுவரையில் பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சான்றிதழ் வழங்கப்பட வில்லை.  இதனால் இச்சமூகத்தை சேர்ந்தவர்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பு கிடைத்து அரசு வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். பல ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.  இச்சமூகத்தினர் கூறியதாவது:

சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இந்த சமூகத்தவர் இல்லை என அரசு அதிகாரிகள் பல ஆண்டுகளாக தெரிவித்து வந்தனர். கடந்த 2001ம் ஆண்டிலேயே இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் மாவட்டத்தில் உள்ள எந்த ஊரில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்ற புள்ளி விபரம் அளித்தோம். ஆனால் அதன்பிறகு 20ஆண்டுகளாகியும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. பள்ளியில் மாணவர்களை சேர்த்த பின்னர் சாதி சான்றிதழ் கேட்கிறார்கள்.  பள்ளிப்படிப்பு முடிந்து பல ஆண்டுகளாகியும் காட்டுநாயக்கன் இனம் என சாதி சான்றிதழ் இல்லாததால் இதுவரை ஏராளமானோருக்கு மாற்றுச்சான்றிதழ் வாங்க முடியவில்லை. இதனால் கல்லூரி படிப்பிற்கு செல்ல முடியவில்லை. பள்ளி படிப்பு படித்திருந்தும் எந்த வேலைக்கும் போக முடியாமல் பல இடங்களில் துப்புரவு பணிகளை செய்து வருகின்றனர். இந்த இனத்தவர் தானா என்பதை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க அரசு சார்பில் மானுடவியல் வல்லுநர் குழு உள்ளது. அவர்களிடத்தில் எங்கள் கோரிக்கை மனு சென்றடைந்ததா என்பது தெரியவில்லை. அதற்கான போதிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. கடுமையாக பாதிப்பு ஏற்படுவதால் பல ஆண்டுகளாக சாதி சான்றிதழ் கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து வருகிறோம். உடனடியாக சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசும் மாவட்ட நிர்வாகமும் செய்யவேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம்...