×

சாத்தூரில் 42 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பழமையான பஸ்நிலையம்

சாத்தூர், ஜன. 21: சாத்தூரில் 42 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான பஸ்நிலையத்தில், போதிய இடவசதி இல்லாமல் பஸ்களை முறையாக நிறுத்த முடியாமல் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர். இதேபோல, போதிய அடிப்படை வசதியின்றி பயணிகளும் சிரமப்படுகின்றனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் 42 ஆண்டுகளுக்கு முன் பஸ்நிலையம் கட்டப்பட்டது. அப்போதைய வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ப 64 சென்ட் பரப்பளவில் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், இடநெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பஸ்களை முறையாக நிறுத்த முடியாமல் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர். பஸ்களை முறையின்றி நிறுத்துவதால், மீண்டும் எடுப்பதற்கு சிரமப்படுகின்றனர். பல பஸ்களை சாலையிலேயே நிறுத்துகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கிடப்பில் போடப்பட்ட புதிய பஸ்நிலைய பணி:
10 ஆண்டுகளுக்கு முன், நகராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, புதிய பஸ்நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக, தமிழக அரசு ரூ.4.50 கோடி நிதி அளித்தது. அதன்பின், புதிய பஸ்நிலையத்துக்கான பணி தொடங்கப்பட்டது. ஆனால், பல காரணங்களால் தொடக்கத்திலேயே பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு புதிய பஸ்நிலையத்துக்காக வழங்கிய நிதியை வட்டியுடன் சேர்த்து நகராட்சி நிர்வாகம் திருப்பி அனுப்பியது.
நெரிசலோ; நெரிசல்:
தற்போதைய பஸ்நிலையம் இடவசதி இல்லாததுடன், அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது. இதனால், டிரைவர்கள், பயணிகள் பெரும் அவதிப்படுகின்றனர். பஸ்நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டி முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பயணிகளுக்கு இருக்கை வசதி இல்லை. இதனால், தரையில் அமருகின்றனர். நீண்ட நின்று பஸ் ஏறிச் செல்கின்றனர். இரண்டு கழிப்பறை இருந்தும் முறையான பராமரிப்பு இன்மையால், அவைகளை யாரும் பயன்படுத்துவதில்லை. போதிய மின்விளக்கு வசதியும் இல்லை. இதனால், இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன. எனவே, சாத்தூரில் புதிய பஸ்நிலையம் அமைக்கும் வரை, தற்போதைய பஸ்நிலையத்தில் இருக்கை, குடிநீர், கழிப்பறை மற்றும் மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஸ் ஓட்டுனர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stand ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை