×

மக்காச்சோளப் பயிர் காப்பீட்டுக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம்

விருதுநகர், ஜன. 21: இ.குமாரலிங்கபுரத்தில் 401 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் படைப்புழு தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனம் குறைவான இழப்பீடு வழங்கி உள்ளதால் முழு காப்பீடு வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். இ.குமாரலிங்கபுரத்தில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள், கோவிந்தராஜ் என்பவரது தலைமையில், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு அளித்தனர். இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: இ.குமாரலிங்கபுரத்தில் கடந்த 2018-19ல் 401.84 ஹெக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. இதற்கு காப்பீடாக ஏக்கருக்கு ரூ.329 இன்சூரன்ஸ் பிரிமியமாக  செலுத்தினோம். இதனிடையே, படைப்புழு தாக்குதல் காரணமாக மக்காச்சோள பயிர் கடுமையாக பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்தது. 30 கிலோ மக்காச்சோளம் கிடைக்க வேண்டிய பரப்பளவிற்கு 2 கிலோ 745 கிராம் மட்டும் கிடைத்துள்ளதாக புள்ளியல் துறை அறிக்கை தெரிவிக்கிறது.

இதன்மூலம் 85 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெளிவாகிறது. இந்நிலையில், பாதிப்பிற்கு அரசு இன்சூரன்ஸ் நிறுவனம் ஏக்கருக்கு இழப்பீடாக ரூ.1,900 வழங்கி உள்ளது. 100 மீ இடைவெளியில் உள்ள மேட்டமலை கிராம விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.16 ஆயிரம், சின்னவாடியூர் கிராம விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.16 ஆயிரம், இ.முத்துலிங்காபுரம் கிராம விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.14,390 நிவாரணமாக வழங்கி உள்ளனர். கடுமையான பாதிப்பினால் சிரமத்திற்கு உள்ளாகி உள்ள இ.குமாரலிங்கபுரம் கிராம விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இது குறித்து மனு அளித்துள்ளோம்’ என்றனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் கண்ணன், வேளாண்துறை இணை இயக்குநர் மூலம் உரிய இழப்பீடு கிடைக்க ஆவண செய்வதாக உறுதி அளித்தார்.

குடிநீர் விநியோகம் ‘கட்’
விருதுநகர், ஜன. 21: வச்சக்காரப்பட்டி ஊராட்சியில் உள்ள அக்கரகாரப்பட்டி கிராம மக்கள், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அக்கரகாரப்பட்டி கிராமத்தில், பாலம் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊராட்சி தலைவரிடம் முறையிட்டபோது, வீட்டின் பின்புறம் ஊற்று தோண்டி தண்ணீர் பிடித்துக் கொள்ளுங்கள் என பதில் அளிக்கிறார். தேர்தலின்போது அவருக்கு வாக்களிக்க வில்லை என்ற தவறான எண்ணத்தை மனதில் வைத்து பேசுகின்றனர். ஊராட்சி மக்கள் அனைவருக்கும் குடிநீர் முறையாக வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...