உரிய இழப்பீடு வழங்கக்கோரி உயர்மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஜலகண்டாபுரம், ஜன.21:  ஜலகண்டாபுரம் அருகே விவசாய நிலத்தின் வழியாக உயர்மின் கோபுர கம்பிகள் கொண்டு செல்வதற்கு இழப்பீடு வழங்கக்கோரி, தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்தினர், உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை அடுத்த சூரப்பள்ளி கிராமம், பள்ளக்கானூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் (எ) பெருமாள் (45). இவரது மனைவி அன்னக்கிளி (37). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் சக்திவேல் (21), இளவரசன் (18), விக்னேஷ் (16) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் உயர்மின் கோபுரத்திற்காக, பெருமாளுக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியாக மின்கம்பிகள் கொண்டுசெல்லும் பொருட்டு, உரிய அனுமதி பெற்று அதற்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட பின் அங்கிருந்த மரங்கள் வெட்டப்பட்டது.

Advertising
Advertising

இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம், பெருமாள் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். மின்கோபுர பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டதால் தான் பெருமாள் தற்கொலை செய்துகொண்டதாக, அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இது குறித்து விசாரணை நடத்திய ஜலகண்டாபுரம் போலீசார், கடன் தொல்லையால் பெருமாள் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப்பதிவு செய்தனர். இதை கண்டித்து அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி, கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று காலை, பெருமாள் நிலத்திற்கு அருகில் உள்ள இடத்தில் மின்கோபுரம் அமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த அன்னக்கிளி மற்றும் அவரது 3 மகன்களும், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் பணிகளை தொடரக்கூடாது என கூறி, உயர்மின்கோபுரத்தின் மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுvபட்டனர். இது குறித்து தகவலறிந்த மேட்டூர் துணை தாசில்தார் சுமதி, ஓமலூர் டிஎஸ்பி பாஸ்கரன், ஜலகண்டாபுரம் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் பவர்கிரிட் அதிகாரிகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மதியம் 1 மணியளவில் 4பேரும் கீழே இறங்கி வந்தனர். இதையடுத்து அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்ற போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: