மாணவர்களுடன் பிரதமர் உரையாடல் அரசு பள்ளிகளில் திரைகள் இன்றி சுவற்றில் ஒளிபரப்பு

சேலம், ஜன.21: பிரதமர் மோடியின் மாணவர்களுடனான உரையாடல், திரைகள் இல்லாமல் பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் சுவற்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.. நாடு முழுவதும் அரசு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில், பிரதமர் மோடி மாணவர்களுடன் உரையாடி வருகிறார். அதன்படி நடப்பாண்டு, கடின உழைப்பே வெற்றிக்கு வழி என்ற தலைப்பில் பிரதமர் மோடி, நேற்று மாணவர்களுடன் உரையாடினார். இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு, பிரதமரிடம் தங்களது கேள்விகளை எழுப்பினர். டெல்லியில் நடந்த இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் ஒளிபரப்ப அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நேற்று காலை 11 மணியளவில், சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டு, பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர். இதில் மோடியின் உரையாடல் இந்தியிலேயே இருந்ததால், ஒருசில பள்ளி ஆசிரியர்கள் அதற்கு விளக்கம் அளித்தனர். இதனிடையே பெரும்பாலான அரசு பள்ளிகளில் கணினி ஆய்வகங்களில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆன்லைன் மூலம் கணினியில் பெற்ற வீடியோவை, புரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டது. ஆனால், 80 சதவீத பள்ளிகளில் புரொஜெக்டருக்கான வெண்திரை இல்லை.  இதனால், ஆய்வகம் மற்றும் வகுப்பறை சுவற்றில் அவை ஒளிபரப்பப்பட்டன. ஒருசில பள்ளிகளில் வெண்நிற சுவர்கள் இல்லாததால், நிகழ்ச்சியை தெளிவாக காண முடியாமல் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டனர்.

ஏற்கனவே அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் தேவையான கம்ப்யூட்டர், புரொஜெக்டர், ஸ்கிரீன் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், நேற்றைய நிகழ்ச்சிக்கு அவற்றை பயன்படுத்தாமல், பள்ளி சுவரை உபயோகப்படுத்தியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியில் திரை உள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே, இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: