தொட்டியம் அருகே முன்விரோத தகராறில் லாரி டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது

தொட்டியம், ஜன.21: தொட்டியம் அருகே முன்விரோத தகராறில் லாரி டிரைவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 3 பேரை தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா திருஈங்கோய்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (27). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர் மகள் சங்கீதாவை சுரேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணத்திற்கு மனைவியின் தாத்தா அம்மையப்பன் (75) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த தகராறில் சுரேஷ் தனது நண்பருடன் சேர்ந்து முதியவர் அம்மையப்பனை வெட்டிக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதில் சுரேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வந்து தனது மனைவியுடன் வெளியூரில் வசித்து வந்தார். இந்த கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் திருஈங்கோய்மலை கிராமத்திற்கு சுரேஷ் வந்தபோது மனைவி சங்கீதாவின் குடும்பத்தினருக்கும், சுரேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சங்கீதாவின் உறவினர்கள் சதீஸ்வரன் (24), மஞ்சுநாதன் (28), தனுஷ்கோடி (28) ஆகிய 3 பேரும் சுரேசை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்த தகவலறிந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷின் சடலத்தை கைப்பற்றி தப்பி ஓடிய மூன்று பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று தனிப்படை போலீசார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மஞ்சுநாதன் திருச்சியிலும், தனுஷ்கோடி, சதீஸ்வரன் ஆகிய இருவரை லால்குடியிலும் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரிடமும் போலீசார் கொலைசம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: