ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு பாம்பு பிடிக்கும் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

சேலம், ஜன.21: ஈரோடு மாவட்டம், சிவகிரி சானார்பாளையத்தை சேர்ந்தவர் கோபால்(29). துணி  வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 2017ம்ஆண்டு டிசம்பர் 16ம்தேதி, சென்னைக்கு செல்வதற்காக கோவையில் இருந்து வந்த ரயிலில் பயணம் செய்தார். ரயில் சேலம் ஜங்சனை தாண்டி சென்றது. ரயில் படிக்கட்டில் அமர்ந்திருந்த கோபால், செல்போனை பயன்படுத்திக்கொண்டே இருந்தார். அந்நேரம் ரயில் மெதுவாக சென்றது. அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர், திடீரென கோபால் கையில் இருந்த செல்போனை கீழே தட்டிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கீழே குதித்து செல்போனை எடுக்க முயன்றார்.

அப்போது செல்போனை தட்டிவிட்ட ஆசாமி, கல்லால் கடுமையாக அவரை தாக்கி விட்டு செல்போனுடன் தப்பி சென்றார். இதில் தாடை பகுதியில் பலத்த காயம் அடைந்த கோபால், ஜங்சன் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இளவரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் கோபாலின் செல்போனை யார் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை ஐஎம்இ எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதில் பள்ளிப்பாளையம் டாஸ்மாக் கடையின் சேல்ஸ்மேன் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அங்கு சென்று நடத்திய விசாரணையில், பள்ளிபாளையம் பெருமாள்மலை செந்தில்பட்டரை லைனை சேர்ந்த ராஜா (எ) ஸ்னேக் ராஜா(25) என்பவரை கைது செய்தனர். பாம்பு பிடிப்பதை தொழிலாக கொண்ட இவர், சமையல் வேலை செய்ய சேலம் வந்துள்ளார். அப்போது செல்போனை பறித்தது தெரியவந்தது. இந்த வழக்கு சேலம் முதன்மை உதவி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராமஜெயம், வாலிபர் சினேக் ராஜாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ₹500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags :
× RELATED இழப்பீடுக்காக கார்களை ஜப்தி செய்ய...