திறப்பு விழா கண்டு ஒரு வாரமாகியும் புதிய கட்டிடத்துக்கு இடம் பெயராத அரசு அலுவலகங்கள்

நாமக்கல், ஜன.21:  நாமக்கல்லில், திறப்பு விழா கண்டு ஒரு வாரமாகியும் புதிய கட்டிடத்துக்கு அரசு அலுவலகங்கள் இடம்பெயராத  அவலநிலையால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம், 8 ஆயிரம் சதுர அடியில் ₹14 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு இடங்களில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் அரசு அலுவலகங்களை சொந்த கட்டிடத்திற்கும் மாற்றும் வகையில், இந்த புதிய கட்டிடம் 2 மாடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் 6 கூட்ட அரங்குகள், பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.

இங்கு வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம், மண் பரிசோதனை ஆய்வகம், விவசாயிகள் பயிற்சி மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மருத்துவம் நிர்வாக அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம், பட்டு வாரிய அலுவலகம், கைத்தறி மற்றும் ஜவுளி அலுவலகம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம், பால் வளத்துறை அலுவலகம், கால்நடைத்துறை அலுவலகம், நிதி தணிக்கை அலுவலகம் ஆகிய அலுவலகங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகங்கள் அனைத்தும் தற்போது நாமக்கல் நகரின் பல்வேறு இடங்களில் வாடகை மற்றும் அரசுக்கு சொந்தமான பழைய கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. திறப்பு விழா நடைபெற்று ஒரு வாரமாகியும் இந்த அலுவலகங்கள் புதிய கட்டிடத்திற்கு இன்னும் இடமாற்றம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அரசுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம்(பொது) இருந்து உரிய உத்தரவுகள் எதுவும் வரவில்லை. புதிய கட்டிடத்தில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள அறைகள் குறித்த விபரம் தெரியவில்லை. அதனால், அலுவலகத்தை இடமாற்றம் செய்யாமல் வைத்துள்ளோம்,’ என்றனர். நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 1000 ஏக்கருக்கு மேல் இடங்கள் இருக்கிறது. இங்கு கடந்த 2000ம் ஆண்டு புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து எஸ்பி அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், நுகர்வோர் நீதிமனறம், வட்டார போக்குவரத்து அலுவலகம், தாட்கோ அலுவலகம் என பல அலுவலகங்கள் இந்த வளாகத்தில் அமைந்துவிட்டன. இதன் காரணமாக, நாமக்கல் நகரில் இயங்கி வந்த பெரும்பாலான அலுவலகங்கள் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் சென்றுவிட்டன.

Tags : government offices ,inauguration ,building ,
× RELATED திருச்செந்தூரில் நாளை மணிமண்டப...