×

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி, ஜன.21: சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், 31வது சாலை பாதுகாப்பு வார  விழா  மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்து 250 மகளிர் இரு சக்கர  வாகனங்களில் தலைக்கவசத்துடன் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த  பேரணியை கலெக்டர் மலர்விழி கொடியசையத்து துவக்கி வைத்தார். பேரணி இலக்கியம்பட்டி,  பாரதிபுரம், அரசு மருத்துவமனை, நெசவாளர் காலனி வழியாக 4 ரோடு பகுதியில்  நிறைவடைந்தது. இப்பேரணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி,  ஏடிஎஸ்பி  சுஜாதா, வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், உதவித் திட்ட  அலுவலர்கள்(மகளிர் திட்டம்) கணேசன், காமராஜ், ராஜீவ்காந்தி, சிவக்குமார்,  மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மணிமாறன், முனுசாமி, பன்னீர்செல்வம், ராஜாமணி,  காவல் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். வழிநெடுகிலும் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பாலக்கோடு:  பாலக்கோடு  பஸ்நிலையத்தில், நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த பஸ் மற்றும் ஆட்டோ டிரைவர்கள்  50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மோட்டார் வாகன ஆய்வாளர் முனுசாமி பேசுகையில், ‘இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசமும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட்டும் கட்டாயம்  அணிய வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம்  ஓட்டுதல், ஓடும் பேருந்தில் ஏறுவது மற்றும் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்  செய்வது போன்ற உயிரிழப்பிற்கு வழி வகுக்கும் நடவடிக்கைகளை தவிர்த்து, சாலை விதிகளை மதித்து உயிரை காப்போம்,’ என்றார். இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பேரணி, பிரசாரம் நடைபெற்றது.

Tags : awareness rally ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி