×

தியாகராஜசுவாமி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

திருவாரூர், ஜன.21: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் கொடி மரம் நேற்று சிவாச்சாரியார்கள் மூலம் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் இந்த கொடிமரத்திற்கு கும்பாபிஷேகமானது அடுத்த மாதம் 5ம்தேதி நடைபெறுகிறது.
திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும்,உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.  இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம். அதன்படி இந்த விழா துவக்கத்திற்காக மஹாதுவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி கோயிலின் மூலவரான வன்மீக நாதர் சன்னதி எதிரே 2ம் பிரகாரத்தில் இருந்து வரும் இக்கொடி மரமானது கடந்த 1928ம் ஆண்டில் நிறுவப்பட்ட நிலையில் அதன் பின்னர் தற்போது 92ஆண்டு காலம் ஆகிவிட்டதால் சற்று சேதம் அடைந்திருந்தது.இதனையடுத்து இந்த கொடிமரத்தினை புதிதாக மாற்றுவதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக முடிவு செய்யப்பட்டதையடுத்து கடந்த மாதம் இந்த கொடிமரம் அகற்றும் பணி நடைபெற்றது. இந்நிலையில் இதற்கான புதிய கொடிமரம் கேரள மாநிலத்திலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பில் தேக்கு மரத்தால் செய்யப்பட்டு கோயிலுக்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் 54 அடி நீளம் கொண்ட இந்த கொடி மரமானது நேற்று காலையில் சிவாச்சாரியார்கள் மூலம் பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்றது. இதனையொட்டி 70 அடி உயரத்திற்கு இரும்பு பைப்புகள் மற்றும் சவுக்கு மரங்கள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு இந்த கொடிமரம் நிறுவப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கவிதா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மேலும் கொடிமரத்திற்கு கும்பாபிஷேமானது அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது.

Tags :
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...