×

கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலிகுப்பத்தில் சுவாமி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை

திருவண்ணாமலை, ஜன.21: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் சுவாமி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள்குறை தீர்வு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட விநியோக அலுவலர் ஹரிதாஸ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் லாவண்யா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி, திருமண நிதியுதவி, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 365 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

இதைத்தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவகத்திற்கு நேரில் சென்று மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தினார். குறைதீர்வு கூட்டத்தில், கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் பிரச்னையை ஏற்படுத்தி சுவாமி சிலை மற்றும் வீடுகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி 50க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 17ம் தேதி எங்கள் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.

அப்போது அதே கிராமத்தை சேந்த நாராயணன் என்பவருக்கும், மற்றொரு தரப்பை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னையால் ஊர்வலத்தின் போது, ஏழுமலை மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் வந்து கலவரத்தை ஏற்படுத்தி வீடு மற்றும் சுவாமி சிலைகள், வாகனங்களை சேதப்படுத்தினர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே மீண்டும் இதுபோன்ற பிரச்சனை ஏற்படாமல் இருக்க இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதேபோல், சொரகுளத்தூர் கிராம் ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்தவர்கள் தங்கள் பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என கோரி 50க்கும் மேற்பட்டவர்கள் மனு அளிக்க வந்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், ‘சொரகுளத்தூர் கிராமத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் இந்து ஆதிதிராவிட வகுப்பை சார்ந்தவர்கள். எங்கள் பகுதியில் 250 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கும் ஊர் பகுதிக்கும் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. எனவே நாங்கள் வசித்து வரும் பகுதியை பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும். தற்போது ஊராட்சி தலைவராக தேர்ந்ெதடுக்கப்பட்டவர் போலி சான்றிதழின் பேரில் தலைவரானர். அவர் பதவியை ரத்துசெய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாக மனு அளித்து விட்டு வந்தவர்கள் தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்களின் பைகளை சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.

Tags : Swami ,Karunaliguppam ,
× RELATED ராமகிருஷ்ண மிஷனின் புதிய தலைவராக சுவாமி கவுதமானந்தாஜி மகாராஜ் தேர்வு