×

பெரணமல்லூர் அருகே பரபரப்பு ஊராட்சி தலைவர் எங்கள் பகுதிக்கு தேவையில்லை

பெரணமல்லூர், ஜன.21: பெரணமல்லூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் தேவையில்லை என்று கிராம பொதுமக்கள் பிடிஓவிடம் புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரணமல்லூர் அடுத்த ஆணைபோகி ஊராட்சி மதுரா மேல்செம்பேடு பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் புதிய ஊராட்சி மன்ற தலைவராக ஜெயச்சந்திரன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில், பதவி ஏற்றதில் இருந்து பொதுமக்களிடம் உங்கள் பகுதியில் திருவிழா, ஏரியில் மீன் வளர்த்தல் என எது நடந்தாலும் எனக்கு உரிய தொகையை தரவேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து கடந்த 17ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, நேற்று பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபாலிடம் தலைவரின் நடவடிக்கை கண்டித்து புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘எங்கள் பகுதிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவையில்லை. தனி அலுவலர் மூலம் நிர்வாகம் நடத்த வேண்டும். குறிப்பாக ஆணைபோகி ஊராட்சியில் இருந்து தனி ஊராட்சியாக மேல்செம்பேடு பிரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்று கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேவையில்லை என்று பிடிஓவிடம் மனு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : area ,Peranamallur ,panchayat leader ,
× RELATED வாட்டி வதைக்கும்...