கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கொட்டிய விவகாரம் எண்ணூர் துறைமுகத்துக்கு ரூ.8.34 கோடி அபராதம்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே உள்ள, காமராஜர் துறைமுகம் 2016ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது உண்டான கழிவுகளை, எண்ணூர் முகத்துவாரத்திற்கு உட்பட்ட மாங்குரோவ் இருக்கும் இடங்களில் துறைமுக நிறுவனம் கொட்டியது. இந்த கழிவுகளை அகற்றக்கோரி, எண்ணூரை சேர்ந்த ரவிமாறன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல், வடசென்னை அனல்மின் நிலையம், சாம்பல் கழிவுகள் கொண்டு செல்லும் குழாய்கள் சேதமடைந்திருப்பதால், கொசஸ்தலை ஆறு மாசு ஏற்பட்டுள்ளது என்று செல்வராஜ் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகளில், கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, பெற வேண்டிய இழப்பீடு குறித்து அறிக்கை அளிக்க மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம், சென்னை ஐ.ஐ.டி நிபுணர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில் ‘‘வடசென்னை அனல்மின் நிலையம் கொசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய் ஒட்டிய பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றவும், சாம்பல் கழிவுகளை கொண்டு செல்ல புதிய குழாய்கள், 2023ம் ஆண்டிற்குள் அமைக்கப்படும்’’ என, தெரிவித்திருந்தது. இந்த அறிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், எண்ணூர் கழிமுகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடலை தூர்வாரி, கழிவுகளை கொட்டி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக, காமராஜர் துறைமுக நிறுவனம் இடைக்கால இழப்பீடாக ரூ.8.34 கோடியை மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் செலுத்த வேண்டும். அப்பகுதியில் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், 2023ம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்க முடியாது.  நான்கு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags : Green Tribunal ,port ,Ennore ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதியின்றி அமைத்து...