வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்

வேலூர், ஜன.21: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்கட்டமாக ₹2.17 கோடி மதிப்பீட்டில் நவீன ஏசி வசதியுடன் கூடிய ஓரடுக்கு தீப்புண் வார்டு கட்டும் பணி தொடங்கியுள்ளது. வேலூரில் கடந்த 1997ம் ஆண்டு திட்டமிடப்பட்டு முறையான அரசாணைக்கு பின்னர், கடந்த 2002ம் ஆண்டு வேலூர் அடுத்த அடுக்கம்பாறை காசநோய் மருத்துவமனை வளாகத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டு, 2005ம் ஆண்டு முதல் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை தொடங்கிய அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தற்போது 750 படுக்கை வசதிகளுடன் இயங்கி வருகிறது. அதோடு பல்வேறு மருத்துவம் சார்ந்த படிப்புகளையும் கொண்டுள்ளது.

புறநோயாளிகள் பிரிவு, நவீன அவசர சிகிச்சை பிரிவு, அவசரகால விபத்து சிகிச்சை பிரிவு, தாய்சேய் மகப்பேறு பிரிவு, காது மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, எலும்பு சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ் வசதியுடன் கூடிய நீரிழிவு சிகிச்சை பிரிவு, மனநல சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு, முடக்குவாத பிரிவு, பொது அறுவை சிகிச்சை பிரிவு, தீப்புண் சிகிச்சை பிரிவு என அனைத்து பிரிவுகளுடன் இயங்கும் இம்மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் வசதி, ஆக்சிஜன் வாயு கிடங்கு என நவீன கட்டமைப்பு வசதிகளும் உள்ளன.

இந்நிலையில், மருத்துவக்கல்லூரியுடன் இணைந்த பல்நோக்கு சிகிச்சை பிரிவும் அதன் அருகில் நெல்வாய் கிராமத்தில் அமைகிறது. அதேபோல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தற்போதுள்ள தீப்புண் சிகிச்சை பிரிவு பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இப்பிரிவுக்கு அருகில் உள்ள மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வருவதால் இதனை விரிவுப்படுத்தி நவீனமயமான முறையில் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதற்கேற்ப இங்கு பல அடுக்குமாடிகளுடன் கூடிய நவீன தீப்புண் சிகிச்சை பிரிவு கட்டிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதில், முதல் கட்டமாக ஓரடுக்குடன் கூடிய ஏசி வசதியுடன் கூடிய தீப்புண் சிகிச்சை பிரிவு கட்டிடம் ₹2.17 கோடி மதிப்பீட்டில் 719.8 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டும் பணி தொடங்கியுள்ளது. ஓராண்டு காலத்தில் இப்பிரிவு கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்றும், இங்கு எண்ணெய், வாயுக்கள் காரணமாக ஏற்படும் தீப்புண்களால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு சிகிச்சை வழங்கும் வசதி இருக்கும் என்றும், ஏற்கனவே உள்ள தீப்புண் சிகிச்சை பிரிவும் தொடர்ந்து இயங்கும் என்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: