பொதுமக்கள் கடும் அவதி பைப் லைன் புதைத்ததால் குண்டும் குழியுமான சாலைகள்

வேலூர், ஜன.21: பைப் லைன் புதைத்த பின்னர் சாலைகளை சீரமைக்காததால் சலவன்பேட்டை, வேலப்பாடி பகுதிகள் வழியாக செல்லும் அரசு டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். வேலூர் சேண்பாக்கம் மற்றும் விரிஞ்சிபுரம் பகுதியில் இருந்து வேலூர் சாஸ்திரி நகர் பகுதிகளுக்கு இரண்டு அரசு டவுன் பஸ்கள் பில்டர்பெட் ரோடு, ஓல்டு டவுன், குட்டை மேடு, வேலப்பாடி வழியாக சென்று வந்தன. இதன் மூலம் அப்பகுதிகளை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்தனர். இந்நிலையில், சலவன்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிய குடிநீர் பைப் லைன்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி முடிந்தவுடன் சாலைகளை சீரமைக்காததால், குண்டும், குழியுமாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் அவ்வழியாக அரசு டவுன் பஸ்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால் அரசு போக்குவரத்துக்கழகம் அவ்வழியாக சென்று வந்த இரண்டு டவுன் பஸ்களின் சேவையையும் நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் 1 முதல் 4 கி.மீ தூரம் ஆரணி சாலை வரை நடந்து வந்து பஸ்களை பிடித்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மாநகராட்சி சலவன்பேட்டை, வேலப்பாடி பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைப்பதுடன், ஆக்கிரமிப்புகளையும் அகற்றி போக்குவரத்துக்கு வழி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘ஏற்கனவே அந்த மார்க்கத்தில் வசூல் குறைவு என்பது ஒருபக்கம் இருந்தாலும் சாலைகள் குண்டும் குழியுமாகவே இருப்பதால் பஸ்கள் இலகுவாக சென்று வருவதில் சிரமம் உள்ளது. குறுகிய சாலைகளும், ஆக்கிரமிப்புகளும் அதிகம். இந்த நிலையில் பைப் லைனை புதைத்துவிட்டு அப்படியே விடப்பட்டுள்ளது. முதலில் சாலைகளை சீரமைக்க வேண்டும். அது முடிந்த பின்னர் பஸ்கள் வழக்கம்போல் அந்த மார்க்கத்தில் செல்லும்’ என்றனர்.

Related Stories: