வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெல்மா அங்காடி திறப்பு

வேலூர், ஜன.21: வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெல்மா அங்காடியில் குறைந்த விலையில் டீ, காபி, மதிய உணவு இயற்கை முறை காய்கறிகள் விற்பனையை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 743 கிராம ஊராட்சிகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கதர் ஆடைகள், ஊதுவத்தி, பாக்கு தட்டு, சட்டைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த பொருட்கள் வெல்மா திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் அங்காடிகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனைத்ெதாடர்ந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வெல்மா அங்காடி விற்பனை மையத்தை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று தொடங்கி வைத்தார். வெல்மா அங்காடியில் கதர் சட்டைகள், தேன், ஊதுவத்தி, இயற்கை முறையில் விளைவித்த மருத்துவ குணம் கொண்ட காய்கறிகள், கீரைகள், காளான், தானியங்கள், நாட்டுக்கோழி முட்டை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெல்மா உணவகமும் திறக்கப்பட்டுள்ளது. இதில், டீ, காபி, மதிய உணவு ஆகியவை விற்கப்படுகிறது. தினமும் காலை 8 மணிமுதல் இரவு 6.30 மணிவரை விற்பனை நடைபெறும்.

முன்னதாக வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஏலகிரி அரங்கில் மக்காச்சோளத்தால் தயாரிக்கப்பட்ட பைகள் விற்பனை மையத்தினை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக, அதற்கு ஈடாக மக்காசோளத்தில் தயாரிக்கப்பட்ட மாற்றுப்பைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பைகள் 100 சதவீதம் மக்கும் தன்மையுடன், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. மண்ணில் புதைத்தால் 6 மாதத்திலும், அப்படியே இருந்தால் 18 மாதத்திலும் மக்கி அழிந்துவிடும். இந்த பைகள் சென்னையில் 1 கிலோ ₹370க்கு விற்கப்படுகிறது. ஆனால் வேலூரில் ₹360க்கே விற்பனை செய்யப்படுகிறது. எனவே இதனை அனைத்து வியாபாரிகளும் வாங்கி பயன்படுத்தவேண்டும். இந்த மக்காச்சோளத்தினால் தயாரிக்கப்பட்ட பைகள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு மட்டுமில்லாமல் பூமி வெப்பமயமாதலையும் தடுக்கும். எனவே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, மக்காச்சோள மாவில் தயாரிக்கப்பட்ட பைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கலெக்டர் அலுவலக பொது மேலாளர் முரளி, மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், மகளிர் திட்ட விற்பனை மேலாளர் ரூபன், திருவரங்கம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: