×

பழவேற்காட்டில் சமூக விரோதிகளின் கூடாரமான சமுதாய நலக்கூடம்

பொன்னேரி, ஜன.21: பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் ரூபாய் பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடம் பயன்பாட்டுக்கு திறக்கப்படாததால் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலைக்கு பிறகு நிலைத்த நீடித்த வாழ்வாதார திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள்நடைபெற்றன. பழவேற்காடு கிராம மக்களின் நலன் கருதி கூடிப் பேசுவதற்கும், சுப நிகழ்ச்சிகள் நடத்து வதற்கும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சமுதாய கூடம் கட்டப்பட்டது. ஆனால் அதை பயன்பாட்டுக்கு திறக்கப்படாததால் பராமரிப்பு இன்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் கட்டிடத்தின் ஜன்னல், கதவுகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். அதற்குள் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் புகுந்து சமூக விரோத செயலில் ஈடுபடுகின்றனர்.  எனவே, மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும், சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமியால் வாழ்வாதாரம் இழந்தோம். ஏராளமான குடிசைகள் சேதமானது. பலர் மாயமானார்கள். அதன்பிறகு நடந்த நிலைத்த நீடித்த வாழ்வாதார திட்டத்தின் கீழ் சமுதாய கூடம் கட்டப்பட்டது. அதை பயன்பாட்டுக்கு திறந்து வைப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால், சிதிலமடைந்து வீணாகிறது. இரவு நேரத்தில் போதைப்பொருட்கைள சிலர் விற்பதுடன், சமூக விரோத செயலிலும் ஈடுபடுகின்றனர். எனவே, சிதிலமடைந்த சமூதாய கூடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...