×

ஆவடி அரசு பள்ளியில் படித்த போலீஸ் அதிகாரிகள் 55 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: விளையாட்டுப் போட்டியில் அசத்தல்

ஆவடி, ஜன.21: ஆவடி அருகே அரசு பள்ளியில் 55 ஆண்டுகளுக்கு முன் படித்து போலீஸ் அதிகாரிகளாகவும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளாகவும் பணியாற்றியவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. அவர்கள் வாலிபால் போட்டிகள் நடத்தி அசத்தினர். ஆவடி, சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பு வளாகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு பயின்று, போலீஸ் அதிகாரிகளாகவும், மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றியவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.  ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சிவனைய்யா தலைமை தாங்கினார். முன்னதாக ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகியும், பள்ளி வளர்ச்சி குழு தலைவருமான ஜெயக்குமார் வரவேற்றார்.

அவர்களுக்கிடையே நடந்த வாலிபால் போட்டியை டிஎஸ்பிக்கள் அசோக்குமார், இருதயராஜ், இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், சுரேஷ், விஜயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் பிரேம் தலைமையிலான அணியினர்  முதலிடத்தையும், எஸ்.ஐ மணிமாறன் தலைமையிலான அணியினர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற அணியினருக்கு ஓய்வுபெற்ற காவல்துறை எஸ்.பி. வன்னியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசு கோப்பைகளை வழங்கினார்.   இறுதியில் தீயணைப்புத்துறை அதிகாரி அருள் நன்றி கூறினார்.

Tags : police officers ,government school meet ,
× RELATED படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி...