சாலைபாதுகாப்பு வார விழா ஹெல்மெட் விழிப்புணர்வு பைக் பேரணி

தூத்துக்குடி,ஜன.21: தூத்துக்குடியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு வார விழாவில் விழிப்புணர்வு பைக் பேரணி நடந்தது. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வாரவிழா நடந்தது. இதனை முன்னிட்டு ஹெல்மெட்  விழிப்புணர்வு பைக் பேரணி நடந்தது. தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையம் முன்பு துவங்கிய பேரணியை அருண் பாலகோபாலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.  இதில் கலந்து கொண்டவர்கள் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.  இருசக்கர வாகனம் ஓட்டும் அனைத்து ஆண்கள், பெண்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிவது, நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிவது போன்ற முக்கிய விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தினர்.

 மேலும் இப்பேரணியில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், போலீசார், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் என பைக்கில் ஹெல்மெட் அணிந்து 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணி  பாளை ரோடு, விவிடி சிக்னல், புதிய மாநகராட்சி, குரூஸ் பர்னாந்து சிலை, பாலவிநாயகர் தெரு வழியாக தென்பாகம் காவல் நிலையம் வந்து நிறைவடைந்தது. இப்பேரணி துவக்க நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர்மன்னன் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், சக்திவேல், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜேஷ், உலகநாதன்  மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்  நாகூர்கனி ஆகியோர் பேரணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.  தூத்துக்குடி இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஜெயபிரகாஷ்,  கிருஷ்ணகுமார், சிசில், எஸ்ஐகள் ராஜாமணி, வெங்கடேஷ் மற்றும் போலீசார், போக்குவரத்து போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: