அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மண்டல பிரிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன. 21:  திருப்பூர் மாநகராட்சி 18வது வார்டுக்குட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள்  செய்து தரக்கோரி மண்டல பிரிவு அலுவலகம் முன்பு பொது மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம்  நடத்தினர். திருப்பூர் மாநகராட்சி 18வது வார்டுக்குட்பட்ட நெருப்பெரிச்சலை அடுத்த எஸ்.ஆர்.வி.நகரில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதிக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் சீராக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி எஸ்.ஆர்.வி.நகர் பெண்கள் உள்பட பொதுமக்கள் காலிகுடங்களுடன் மா.கம்யூ. கிளை செயலாளர் சந்திரன் தலைமையில் நேற்று காலை பூலுவப்பட்டி அருகே உள்ள 2ம் மண்டல 5வது பிரிவு அலுவலகத்திற்கு முன்பு கொடிகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் மா.கம்யூ. ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிகாமணி, மகாலிங்கம், பானுமதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற 2ம் மண்டல சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொதுமக்கள் கொடுத்தனர்.

 

அந்த மனுவில், எங்கள் பகுதிக்கு 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படும் குடிநீரை 5 நாட்களுக்கு ஒருமுறை தேவையான அளவு வழங்க வேண்டும். வீட்டு குழாய்களில் குடிநீர் முறையாக விநியோகிக்க  வேண்டும். எஸ்.ஆர்.வி.நகர் பகுதியில் பெரும்பாலான வீதிகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் 4வது திட்ட குடிநீர் குழாய் பதிக்கவில்லை. எனவே அனைத்து வீதிகளிலும் அந்த குழாய்கள் பதிக் வேண்டும். ஏற்கனவே தோண்டப்பட்ட குழிகளை மூடுவதுடன், அங்கு தார்சாலை, தெருவிளக்கு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.  இதையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மாநகராட்சி ஊழியர்களை உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி பொதுமக்கள் கோரிக்கை தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

Related Stories: